இது டிரெய்லர் மட்டுமே...படம் இன்னும் வரவில்லை... தேர்தலுக்கு தயாரான பிரதமர் மோடி..!
மீனா சமூகத்தை கவரும் விதமாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மோடி, மாநிலத்தின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யபட்டது. நிதித்துறையை கவனித்து வரும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டப்பேரவைக்கு தயாராக வந்தார்.
ஆனால், அவர் பட்ஜெட்டை வாசித்த சில நிமிடங்களில் அனைவரும் குழம்பினர். ஏனென்றால், அவர் கடந்தாண்டு பட்ஜெட்டை சட்டசபையில் வாசித்தார். பின்னர், தலைமை கொறடா இடைமறித்து, பட்ஜெட் உரையை தாக்கல் செய்வதை தடுத்து நிறுத்தினார். இந்த சம்பவத்திற்கு விளக்கம் அளித்த கெலாட், தான் வருந்துவதாகவும் நடந்தது தவறு என்றும் கூறினார்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை முன்வைத்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் கட்சியையும் ராஜஸ்தான் முதலமைச்சர் கெலாட்டையும் கடுமையாக சாடியிருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தை இன்று கலாய்த்து பேசியுள்ள பிரதமர் மோடி, "கடந்தாண்டு பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்திருக்கிறார். பழைய பட்ஜெட்டை ஒரு ஆண்டு முழுவதும் பெட்டியில் வைத்துள்ளனர்" என்றார்.
ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் டெல்லி - மும்பை விரைவுச்சாலையை திறந்து வைத்து பேசிய அவர், "யார் வேண்டுமானாலும் தவறு செய்யலாம். ஆனால் காங்கிரசுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை. அவர்களின் பட்ஜெட் அறிவிப்புகள் காகிதத்தில் மட்டுமே உள்ளன. மக்களை சென்றடையவில்லை" என விமர்சித்துள்ளார்.
அந்த மாநிலத்தில் இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரச்சாரத்தில் இறங்கியுள்ள பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைத்தார்.
மீனா சமூகத்தை கவரும் விதமாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மோடி, மாநிலத்தின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி பேசிய மோடி, "எதிரிகளுக்கு பயந்து எல்லையோர கிராமங்களை மேம்படுத்தவில்லை.
காங்கிரஸ் கட்சி முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் தாமதப்படுத்துகிறது. வேலை செய்வதில்லை. வேறு யாரையும் வேலை செய்ய விடுவதில்லை. அத்தகைய அரசாங்கத்திடம் இருந்து எங்களுக்கு விடுதலை வேண்டும். மேலும் வளர்ச்சிக்கான அரசு வேண்டும்.
தௌசா மட்டும் இன்றி ஆல்வார், பரத்பூர், டோங்க், பூண்டி மற்றும் கோட்டா ஆகியவை விரைவுச் சாலையால் பயனடையும். நீங்கள் டெல்லியின் பெரிய சந்தைகளை சென்று அடையலாம். குறிப்பாக விவசாய விளைபொருட்களுக்காக. இதன் மூலம் விவசாயிகள் பயனடைவார்கள்.
இது டிரெய்லர் மட்டுமே. படம் இன்னும் வரவில்லை. ராஜஸ்தான் எனக்கு அன்பையும் ஆசீர்வாதத்தையும் அளித்துள்ளது. அதற்கு முன் தலைவணங்குகிறேன். ராஜஸ்தான் துணிச்சலான மக்களின் நாடு" என்றார்.
1,400 கிலோமீட்டர் நீளமுள்ள டெல்லி-மும்பை அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜஸ்தானின் தௌசாவில் தொடங்கி வைத்தார்.
டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கான பயண நேரத்தை ஐந்து மணி நேரத்திலிருந்து சுமார் மூன்றரை மணி நேரமாக இந்த 246 கிலோமீட்டர் டெல்லி-தௌசா-லால்சோட் எக்ஸ்பிரஸ்வே குறைக்கும்