ராகுலுக்கு நெருக்கமான சச்சின் பைலட்டை தூண்டிவிடும் மோடி! ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு!
சச்சின் பைலட்டை காங்கிரஸ் தண்டித்து வருவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ராஜஸ்தானில் வரும் 25ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. ராஜஸ்தான் அரசியலை பொறுத்தவரையில், அங்கு ஆட்சியில் இருந்த கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்ததாக கடந்த 30 ஆண்டுகளில் சரித்திரமே இல்லை. ஆனால், இந்த முறை வரலாற்றை மாற்றி எழுதி, ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முதலமைச்சருமான அசோக் கெலாட் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.
பைலட் vs கெலாட்:
ராஜஸ்தானில் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவராக கருதப்படும் சச்சின் பைலட் ஆகியோருக்கிடையே பனிப்போர் நிலவி வந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் முதலமைச்சர் பதவியை பெறுவதில் இருவருக்கும் பெரிய பிரச்னை வெடித்தது.
காங்கிரஸ் மேலிடத்தின் தலையீட்டால் அசோக் கெலாட்டுக்கு முதலமைச்சர் பதவியும் சச்சின் பைலட்டுக்கு துணை முதலமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. இருந்தபோதிலும், இருவருக்கும் அதிகார போட்டி நிலவி வந்தது. இதனால், சொந்த அரசாங்கத்திற்கு எதிராகவே சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார்.
இறுதியில், அவரின் துணை முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. புதிய கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி எடுத்து முயற்சியில் பிரச்னை முடிவுக்கு வந்தது. தங்களுக்கிடையே பிரச்னை இருந்தாலும் தேர்தல் காரணமாக சச்சின் பைலட்டும் அசோக் கெலட்டும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
பிரதமர் மோடியின் புது கணக்கு:
இந்த நிலையில், சச்சின் பைலட்டை காங்கிரஸ் தண்டித்து வருவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். பில்வாராவின் ஷாபுராவில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, "சச்சின் பைலட்டுக்கு எதிராக காங்கிரசின் வெறுப்பு வெளிப்படுகிறது. காங்கிரஸின் வரலாறு உங்களுக்குத் தெரியும்.
கட்சியில் நடக்கும் தவறுகளுக்கு எதிராக குரல் எழுப்ப முயற்சிப்பவர், டெல்லியில் அமர்ந்திருக்கும் உயர்மட்டக் குழுவால் தங்களின் இடத்தை இழக்க நேரிடும். ராஜேஷ் பைலட் (சச்சின் பைலட்டின் தந்தை) ஒரே ஒரு முறை காங்கிரஸுக்கு எதிராக குரல் எழுப்பினார். அதுவும் காங்கிரஸின் முன்னேற்றத்திற்காக எழுப்பினார். ஆனால், கட்சி இன்றுவரை சச்சின் பைலட்டைத் தண்டித்து வருகிறது. ராஜேஷ் பைலட் இப்போது இல்லை. ஆனால், காங்கிரஸ் அவரது மகன் சச்சின் பைலட் மீது வெறுப்பு உணர்வுடன் உள்ளது" என்றார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மறைந்த ராஜேஷ் பைலட், சோனியா காந்தியை பிரதமராக முன்னிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர். 1996இல் கட்சித் தலைவர் பதவிக்கு சீதாராம் கேஸ்ரிக்கு எதிராக போட்டியிட்ட இரு தலைவர்களில் இவரும் ஒருவர். கட்சி தலைவருக்கான தேர்தலில் அவரும் சரத் பவாரும் போட்டியிட்டு தோல்வியடைந்தனர்.
கடந்த 2000ஆம் ஆண்டு, ராஜேஷ் பைலட் காலமானார். அதை தொடர்ந்து, 2004இல் அரசியலில் சேர்ந்த சச்சின் பைலட், ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக கருதப்படுகிறார். 2004ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், தௌசாவில் போட்டியிட்டு வெற்றிபெற்று, இளம் வயதில் தேர்வான எம்.பி. என்ற பெருமையை பெற்றார்.