PM Modi : பிரதமர் மோடி கல்வி தகுதி தொடர்பான வழக்கு...இரு தரப்பு வாதம் நிறைவு...தீர்ப்பு எப்போது..?
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பை இன்று ஒத்திவைத்தது.
பிரதமர் மோடி வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களில் தெளிவான பதில்கள் கிடைக்காமல் உள்ளது. அதில், ஒன்றுதான் அவரின் கல்வி தகுதி தொடர்பானது.
கடந்த 1978ஆம் ஆண்டு, பிரதமர் மோடி இளங்கலையில் தேர்ச்சி பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், மோடி பிரதமரான பிறகு, அவர் பட்டம் பெறவே இல்லை என சர்ச்சை எழுந்தது.
இதை தொடர்ந்து, 1978ம் ஆண்டு பி.ஏ. படித்த அனைத்து மாணவர்களின் தேர்வு முடிவுகளையும் அவர்களின் பெயர், எண் ஆகியவற்றையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரி இருந்தார்.
ஆனால், கேட்கப்பட்ட தகவல் மூன்றாம் தரப்பினருடையது எனக் கூறி அதை அளிக்க டெல்லி பல்கலைக்கழகத்தின் மத்திய பொது தகவல் அதிகாரி மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து, மத்திய தகவல் ஆணையத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.
இதுகுறித்து மத்திய தகவல் ஆணையம், கடந்த 2016ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், "வழக்கை விசாரித்ததை தொடர்ந்து முன்னதாக வழங்கப்பட்ட தீர்ப்புகளை பரிசீலனை செய்யப்பட்டதில், முன்னாள் அல்லது இந்நாள் மாணவரின் கல்வி தொடர்பான விவரங்கள் அனைத்தும் பொதுவெளியின் கீழ் வருகிறது.
எனவே, கேட்கப்பட்ட தகவல்களை வழங்கமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உத்தரவிடப்படுகிறது" என தெரிவித்தது.
மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக டெல்லி பல்கலைக்கழகம் 2017ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. முதல் விசாரணையிலேயே, மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
அதன்பிறகு வெவ்வேறு காரணங்களுக்காக வழக்கு மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. வழக்கின் தீர்ப்பில் தாமதம் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்று கொரோனா பெருந்தொற்று.
இந்நிலையில், இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பை இன்று ஒத்திவைத்தது.
குஜராத் பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "ஒருவருக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து தனது சொந்த பட்டப்படிப்பு சான்றிதழ் தேவைப்பட்டால், அவர் அதைக் கோரலாம். ஆனால் மூன்றாவது நபர் அதைக் கோர முடியாது. இருப்பினும், மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் பொது தளத்தில் வைக்கப்பட்டுள்ளது" என்றார்.
Gujarat High Court reserves orders in a petition by Gujarat University challenging direction to furnish copies of Prime Minister Narendra Modi's degree certificate to Delhi Chief Minister Arvind Kejriwal#NarendraModi @PMOIndia @ArvindKejriwal #GujaratHighCourt
— Bar & Bench (@barandbench) February 9, 2023
அனைத்து மாணவர்களின் எண்கள், தந்தை பெயர்கள் மற்றும் மதிப்பெண்களுடன் அனைத்து மாணவர்களின் முடிவுகளின் விவரங்களையும் கோரும் வழக்கில் கேட்கப்பட்ட தகவல் வெளியிடப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழகம் வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.