Women's Reservation Bill: மகளிர் இடக்கீடு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றுங்கள்.. இரு அவைக்கும் வேண்டுகொள் விடுத்த பிரதமர் மோடி!
மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் விதமாக அந்த பணிக்கு கடவுள் என்னை தேர்வு செய்துள்ளார் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி தருமாறு இரு அவைகளிலும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
மகளிருக்கான 33% சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் நேற்று சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு அரசியலமைப்பு (128வது திருத்தம்) மசோதா 2023, நாரி சக்தி வந்தன் சட்டம் அல்லது பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா என்று அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்த மசோதாவில், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் எல்லை நிர்ணயம் செய்யும் வரை இந்த சட்டம் அமல்படுத்தப்படாது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், புதிய நாடாளுமன்றம் குறித்தும், மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்தும் பிரதமர் மோடி என்ன பேசினார் என்பது குறித்து பார்க்கலாம்.
”புதிய நாடாளுமன்றம் 140 கோடி இந்திய மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது. இந்த புதிய அத்தியாயத்தை நாம் அனைவரும் தொடங்குகிறோம். கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்புணர்வுகளை மறந்துவிட்டு, புதிய கட்டடத்தில் நீங்கள் முன்வைக்கப்படும் கருத்துகள், வரும் தலைமுறைக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா:
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக பல ஆண்டுகளாக பல்வேறு விவாதங்கள் நடந்து வருகிறது. கடந்த 1996ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முதல்முறையாக இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அப்போது மசோதா நிறைவேற்ற படவில்லை. அதைதொடர்ந்து, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவரது ஆட்சி காலத்தில் இந்த மசோதாவை நிறைவேற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், போதிய ஆதரவு இல்லாமல் போனதால் அவரது கனவு நனவாகாமலே போனது. மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் விதமாக அந்த பணிக்கு கடவுள் என்னை தேர்வு செய்துள்ளார். அதன்படி, எங்கள் அரசு இதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட, அம்மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்தவகையில், நேற்று (செப்டம்பர் 19ம் தேதி) வரலாற்றில் பொறிக்கப்பட்டு விட்டது.
மசோதாவை நிறைவேற்றுங்கள் - பிரதமர் மோடி
ஒவ்வொரு துறையிலும் பெண்கள் முன்னேறி வருகின்றன. அதிலும், கொள்கை முடிவு எடுப்பதிலும் அவர்களுக்கு அதிகபட்ச பங்கு இருக்க வேண்டும். பெண்கள் தலைமையிலான முன்னேற்றத்தை முன்னெடுத்து செல்வதற்காக, அரசியல் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்கிறோம். இதனால் இந்திய ஜனநாயகம் இன்னும் வலுப்படும் என்று நினைக்கிறேன். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை சட்டமாக்க நாங்கள் உறுதி எடுத்துள்ளோம் என்று எனது தாய்மார்களுக்கும், மகள்களுக்கும் உறுதி அளிக்கிறேன். மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி தருமாறு இரு அவை உறுப்பினர்களையும் கேட்டு கொள்கிறேன்” என்று பேசினார்.
எப்போது அமலுக்கு வரும்..?
பிரதமர் வாஜ்பாய் காலத்தில் செய்யப்பட்ட அரசியல் சட்டத் திருத்தமே இதற்குக் காரணம். அப்போது 2026-ம் ஆண்டுக்கு பிறகு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் தரவுகள் வெளியிடப்பட்டு அதன் பிறகு எல்லை நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், 2026க்கு பிறகு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2031ல் நடத்தப்படும். அதன் பிறகு 2034-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வரும், அப்போதுதான் அந்த மக்களவையில் நாரி சக்தி வந்தன் சட்டம் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.