புதுச்சேரி : பொது இடங்களில் விநாயகர் சிலையா? தமிழ்நாட்டை பின்பற்றவேண்டும் - நாராயணசாமி..!
புதுவையில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி; அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்
புதுவையில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் தனது அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வீடியோவில் கூறியிருப்பதாவது: கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் பொதுச் சொத்துகளைத் தனியாரிடம் குத்தகை விட்டு அதன் மூலமாக ரூ.6 லட்சம் கோடி 4 ஆண்டுகளில் நிதி திரட்டுவதற்கான திட்டத்தை அறிவித்தார்.
இந்த சொத்துகளை தனியாரிடம் தாரைவார்த்து கொடுப்பதன் மூலமாக நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் உருவாகும். அங்கு பணிபுரியும் ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். பொது சொத்துகளைத் தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பலகட்ட போராட்டங்களை அறிவித்துள்ளன. அதன்படி புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 15 முதல் 20 நாட்கள் வரை நடைபெறும். காங்கிரஸ் ஆட்சியில் நாங்கள் தொடர்ந்து செய்தோம். ஆனால், தற்போது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 8 நாட்களில் குறுகிய காலத்தில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியாளர்கள் எதிர் கட்சியினரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியால் திணறுகின்ற நிலையைத்தான் நாம் பார்க்க முடிகிறது.
சட்ட பேரவையில் முதல்வரும், அமைச்சர்களும் 95 சதவீத அறிவுப்புகளை வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்புகள் பெரும்பாலானவை காங்கிரஸ் ஆட்சியில் கோப்புகள் தயார் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டவை. அப்போது ஆளுநராக இருந்த கிரண்பேடி அரசுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டங்களை முடக்கினார். இது தற்போதைய ஆட்சியாளர்களுக்கும் தெரியும். ஆனால், நாங்கள்தான் இந்த அறிவிப்புகளை கொடுத்தோம் என்று மார்தட்டி கொள்கின்றனர். ஒருபுறம் மோடி அரசும், மற்றொரு புறம் கிரண்பேடியும் எங்கள் அரசுக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என காலதாமதம் செய்தனர். திட்டங்களை முடக்கினார்கள். நிதி ஆதாரத்தைக் கொடுக்காமல் தடுத்து நிறுத்தினார்கள்.
இப்போதுள்ள ஆட்சியாளர்கள் எங்களை குறை கூறுகிறார்கள். சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்த அனைத்து திட்டங்களையும் 3 மாத காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் மக்களுக்கு அரிசிக்கு பதிலாக பணம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவு மாற்றப்பட்டுள்ளதா? மத்திய அரசு உத்தரவு நிலுவையில் இருக்கும் போது ரேஷன் கடைகளை திறந்து எப்படி அரிசி விநியோகம் செய்ய முடியும்? புதுச்சேரி அரசு கொள்கை எதுவுமில்லாமல் முன்னுக்குப் பின் முரணான அறிவிப்பை வெளியிட்டு மக்களிடம் நற்பெயர் பெற முயல்கிறது.
உண்மை நிலை என்ன? மத்திய அரசிடம் இருந்து எவ்வளவு நிதி வந்துள்ளது? சட்டப்பேரவையில் அறிவித்த திட்டங்களை பட்ஜெட்டில் உள்ள நிதியில் வழங்க முடியுமா? இதனை முதல்வர் மக்கள் மன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.
கொரோனா 3-வது அலை பரவும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கலாம். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடலாம் என ஆளுநர் அறிவித்துள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கக்கூடாது, ஊர்வலம் நடத்தக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது போல புதுச்சேரி மாநிலத்திலும் அதனைக் கடைபிடிக்கவேண்டும். ஆளுநர் தனது அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.