”ஒரு பொண்ணு பஸ் ஓட்டுறதான்னு கேட்டாங்க.. பயந்தாங்க” : அசரவைக்கும் கொச்சியின் ஜான்சி ராணி..
கனவுகளுக்கு பாலினம் ஒரு தடையாக இருக்கக் கூடாது. எல்லா வேலைகளையும் எல்லோரும் செய்யலாம். ஆண், பெண் இல்லை வேறு பாலினம் என எந்த விதியும் இல்லை. ஆகையால் ஒரு பெண் பஸ் ஓட்டுவதை புரட்சியாக பார்க்கத் தேவையில்லை என்று கூறியுள்ளார் 21 வயதான ஆன் மேரி ஆன்சலன்.
கனவுகளுக்கு பாலினம் ஒரு தடையாக இருக்கக் கூடாது. எல்லா வேலைகளையும் எல்லோரும் செய்யலாம். ஆண், பெண் இல்லை வேறு பாலினம் என எந்த விதியும் இல்லை. ஆகையால் ஒரு பெண் பஸ் ஓட்டுவதை புரட்சியாக பார்க்கத் தேவையில்லை என்று கூறியுள்ளார் 21 வயதான ஆன் மேரி ஆன்சலன்.
இவரது சொந்த ஊர் கேரளா. எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் இவர் சட்டம் பயின்று வருகிறார். வார இறுதி நாட்களில் ஆன் ஹே டே என்ற பெயர் கொண்ட தனியார் பேருந்தை காக்கநாடு பெரும்படப்பு சாலை வழியாக இயக்குகிறார். மற்ற வார நாட்களில் மாலை வேளையில் பேருந்தை பேருந்து நிலையத்திலிருந்து உரிமையாளரின் வீட்டுக்கு ஓட்டிச் செல்கிறார். உரிமையாளரின் வீடு ஆன் மேரியின் அண்டை வீடு. அதனாலேயே உரிமையாளர் ஆனுக்கு அந்த பேருந்தின் மீது முழு சுதந்திரத்தைக் கொடுத்துள்ளார். முறைப்படி பேருந்தை இயக்கக் கற்றுக் கொண்டு லைசன்ஸ் பெற்றுள்ள ஆன், கடந்த 8 மாதங்களாக பேருந்தை இயக்கி வருகிறார்.
தனது பயண அனுபவம் குறித்து ஆன் பேசியுள்ளார். அதில் அவர், நான் இன்றும் எனது முதல் நாள் பேருந்து பயண அனுபவத்தை மறக்கவில்லை. மக்கள் என்னைப் பார்த்து அதிர்ந்து போனார்கள். ஒரு பெண் பிள்ளை பஸ் ஓட்டுவாரா என்பது போல் அவர்களின் பார்வையில் சந்தேகம் இருந்தது. ஆரம்ப நாட்களில் என் காதுபடவே இந்தப் பெண் என்றாவது விபத்தை ஏற்படுத்துவார் என்று பேசியவர்களே அதிகம். ஆனால் காலம் செல்லச் செல்ல இன்று எல்லோருக்கும் என் மீது நம்பிக்கை வந்துள்ளது. அதேபோல் முன்பெல்லாம் சக ஆண் ஓட்டுநர்கள் என்னை மதிக்க மாட்டார்கள். இப்போது அவர்களும் உறுதுணையாக இருக்கிறார்கள்.
எனக்கு சிறு வயதிலிருந்தே பெரிய வாகனங்கள் மீது ஆர்வம் அதிகம். லாரி, டிரக், பஸ் போன்ற கனரக வாகனங்களை ஓட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இன்று அது நினைவாகிவிட்டது. அதனாலேயே நான் சம்பளம் இல்லாமல் இந்த பேருந்தை ஓட்டுகிறேன்.
எனது 15வது வயதில் நான் புல்லட் ஓட்ட கற்றுக் கொண்டேன். எனது அண்டை வீட்டிலிருந்த சரத் தான் நான் புல்லட் ஓட்ட ஊக்குவித்து சொல்லிக் கொடுத்தார். என் பாட்டி மேரியம்மா என்னை சிறு வயதிலிருந்தே ஊக்கப்படுத்தினார். இந்த பேருந்தும் சரத் உடையது தான். அவர் தான் எனக்கு இந்தப் பேருந்தை ஓட்ட அனுமதி கொடுத்துள்ளார். என் வாழ்க்கையின் லட்சியம் நீதிபதி ஆக வேண்டும் என்பதே. இந்த பஸ் ஓட்டுவதெல்லாம் எனது சுய விருப்பத்தின் பேரில் செய்வது. என் தாய் ஸ்மித்தா ஜார்ஜ் பாலக்காடு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கிறார். ஒருநாள் நானும் அதுபோல் நீதிபதியாவேன்.
பஸ் ஓட்டுவதைத் தவிர எனக்கு பாட்டு, நடனத்தில் ஆர்வம் உண்டு,. அதுபோல் உடலை உறுதியாக வைத்துக் கொள்ள ஜிம் செல்வேன். நான் படிக்கும் நேரம் போக மிச்ச நேரத்தை நான் பயனுள்ளதாக கழிக்க விரும்புகிறேன்.
ஒரு பெண் இந்த வேலையைத் தான் செய்ய வேண்டும் என்று எந்த நிபந்தனையும். வேலையில் ஆண், பெண், மற்ற பாலினம் என எந்த பேதமும் இல்லை. ஒரு பெண் பேருந்து ஓட்டினாலோ இல்லை சமூகத்தில் ஆண்கள் மட்டுமே செய்யும் வேலை என்று கட்டமைக்கப்பட்ட வேலையை செய்தாலோ அதை புரட்சியாகப் பார்க்காதீர்கள். மாறாக அதை இயல்பாக்குங்கள். பாலினம் கனவுகளுக்கு தடையாக இருக்கக் கூடாது.
இவ்வாறு ஆன் கூறியுள்ளார்.