Parliament Special Session: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்.. விவாதிக்கப்பட உள்ள 8 மசோதாக்கள் இவை தான்..!
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மொத்தமாக 8 மசோதாக்கள் மீது விவாதம் நடத்தப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சிறப்புக் கூட்டத் தொடரில் மொத்தம் 8 மசோதாக்கள் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக, நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
சிறப்பு கூட்டத்தொடர்:
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும். அதில் ஜனவரி மாத இறுதியில் தொடங்கி மார்ச் மாதம் வரையில் பட்ஜெட் கூட்டத்தொடரும், மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலும், குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும் நடைபெறும். ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாகசெப்டம்பர் 18ம் தேதி தொடங்கி 5 நாட்களுக்கு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறும் என கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. கூட்டத்தின் நோக்கம் என்பது தொடர்பாகவும், நிகழ்ச்சி நிரல் என்ன என்பது குறித்தும் எந்தவித தகவலும் தெரிவிக்கப்படாமல் இருந்தது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திடீரென அறிவிக்கப்பட்ட இந்த சிறப்புக் கூட்டத்தொடரால், பொதுமக்களிடையே பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
மசோதாக்கள் என்ன?
இந்நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மொத்தம் 8 மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்படும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். அதில், முதியோர் நலன் தொடர்பான ஒரு மசோதாவும், பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர் நலன் தொடர்பான 3 மசோதாக்களும் அடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். அதேநேரம், மசோதாக்கள் என்ன என்பது தொடர்பான தகவல் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. இதனால், தாக்கல் செய்ய அதிக வாய்ப்புள்ள சில மசோதாக்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
- ஏற்கனவே மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தலைமை தேர்தல் ஆணையர்கள், தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படலாம். உச்சநீதிமன்ற நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சரவை செயலாளரை தேர்வுக் குழுவில் இடம்பெற செய்யும் இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன
- ஏற்கனாவே மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் திருத்த மசோதா,
- பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா
- அஞ்சல் அலுவலக மசோதா ஆகியவை மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படலாம்
- மூத்த குடிமக்கள் நல மசோதா, 2023
- பட்டியலின மற்றும் பழங்குடியின நலன் தொடர்பாக 3 மசோதாக்கள்
ரகசிய மசோதாக்கள்:
அதேநேரம், நிகழ்ச்சி நிரலில் அறிவிக்கப்படாத சில மசோதாக்களும் அறிமுகப்படுத்தப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி,
- நாட்டின் பெயரை இந்தியா என்பதிலிருந்து பாரதம் என மாற்றுவது தொடர்பான மசோதா
- பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் மசோதா
- ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை கொண்டு வருவதற்கான மசோதா
- மக்களவ மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீழு வழங்கும் மசோதா
- மாநிலங்களவயில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தண்டனை சட்டம் தொடர்பான மசோதா, ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டு விவாதமே இன்றி நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் இந்த சிறப்புக் கூட்டத்தொடரில் கேள்வி நேரமே கிடையாது என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

