Women's Marriage Age Bill | பெண்களின் திருமண வயது குறித்த மசோதாவை விவாதிக்கும் நிலைக்குழுவில் எத்தனை பெண் எம்.பிக்கள் தெரியுமா?
பெண்களுக்கான திருமண வயதை 21-ஆக உயர்த்த மத்திய அரசு கடந்த மாதம் மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
பெண்களுடைய திருமண வயதை 18-இல் இருந்து 21-ஆக உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசு முடிவு எடுத்தது. இதைத் தொடர்ந்து குளிர்கால கூட்டத்தொடரில் இது தொடர்பான மசோதாவை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த குழந்தை திருமண தடை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டது. அந்த நிலைக்குழு இந்த மசோதா தொடர்பாக விரிவான விவாதத்தை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்யும்.
இந்நிலையில் இந்த மசோதாவை கல்வி, பெண்கள்,குழந்தைகள், இளைஞர் மற்றும் விளையாட்டு துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பார்க்க உள்ளது. இந்த நாடாளுமன்ற நிலைக்குழு மாநிலங்களவையின் கட்டுப்பாட்டில் வருகிறது. இந்த நிலைக்குழுவில் 31 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஷ்மிதா தேவ் மட்டுமே பெண் எம்.பி. மீதமுள்ள 30 பேரும் ஆண் எம்.பிக்கள்.
பெண்களின் திருமண வயது தொடர்பான முக்கியமான மசோதா தொடர்பாக விவாதிக்க உள்ள நாடாளுமன்ற குழுவில் ஒரே ஒரு பெண் எம்பி மட்டும் இடம்பெற்றுள்ளது எப்படி சரியாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பி சுப்ரியா சுலே, ”இந்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவருக்கு மற்ற பெண் எம்.பிக்களை அழைக்கும் அதிகாரம் உள்ளது. அதை பயன்படுத்தி அவர் கூடுதலாக சில பெண் எம்.பிக்களை அழைத்தால் மசோதா மீதான இந்த விவாதம் நன்றாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில் 24 துறைசார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் உள்ளன. அவற்றில் 16 குழுக்கள் மக்களவையின் கீழும், 8 நிலைக்குழுக்கள் மாநிலங்களவையின் கீழும் செயல்படும். இந்த துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுவில் மொத்தம் 31 எம்பிக்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். அதில் 21 பேர் மாநிலங்களவையில் இருந்தும், 10 பேர் மாநிலங்களவையில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த நிலைக்குழுக்கள் தேர்ந்தெடுக்கப்படும் எம்பிக்கள் ஒராண்டிற்கு இந்தக் குழுவில் இருப்பார்கள். மக்களவையில் இருக்கும் 21 எம்பிக்களை சபநாயகரும், மாநிலங்களவையிலிருந்து 10 எம்பிக்களை அவை தலைவரும் தேர்வு செய்வார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட 31 நபர்களில் இருந்து ஒருவர் இந்தக் குழுவிற்கு தலைவராக செயல்படுவார். இந்த நிலைக் குழுக்கள் பரிந்துரைக்கப்படும் மசோதா தொடர்பாக விவாதம் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும். அதன்படி கல்வி,பெண்கள்,குழந்தைகள் மற்றும் விளையாட்டு சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு மாநிலங்களவையின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. இந்த நிலைக்குழுவிற்கு பாஜக எம்.பி வினய் சாஹசரபுத்தே தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: முற்பட்ட வகுப்பினருக்கான (EWS) ரூ.8 லட்சம் வருமான வரம்பு சரியானதே - அரசு திட்டவட்டம்