Special Parliament Session: 75 ஆண்டு கால சகாப்தம் முடிந்தது.. புதிய நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புக் கூட்டத் தொடர்
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை நடவடிக்கைகள் இன்று முதல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற உள்ளன.
கடந்த 75 ஆண்டுகாலமாக பயன்படுத்தி வந்த பழைய நாடாளுமன்றத்தை கைவிட்டு, மத்திய அரசு இன்று முதல் புதிய நாடாளுமன்றத்தை பயன்படுத்த உள்ளது.
பிரியாவிடை பெற்ற நாடாளுமன்ற கட்டடம்:
பெரும் பொருட்செலவில் டெல்லியில் மத்திய அரசு புதிய நாடாளுமன்றத்தை கட்டி எழுப்பியுள்ளது. அதன் திறப்பு விழாவில் தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக செங்கோல் வைக்கப்பட்டது. இந்நிலையில் தான், வழக்கத்திற்கு மாறாக 5 நாட்கள் நடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர் 18 முதல் 22ம் தேதி வரை நடைபெறும் என கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதில், முதல் நாள் கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்றத்தில் நடைபெறும் எனவும், அதற்கடுத்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் முழுவதும் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அப்போது, பேசிய பிரதமர் மோடி உள்ளிட்ட உறுப்பினர்கள் நாடாளுமன்றம் தொடர்பான தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நாளின் முடிவில் பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு உறுப்பினர்கள் பிரியா விடை அளித்தனர். தொடர்ந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த பிரமாண்ட கட்டடம் அருங்காட்சியமாக மாற்றப்பட உள்ளது.
புதிய அத்தியாயம்:
இதைதொடர்ந்து, இன்று முதல் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முழுவதும் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு மாற்றப்பட உள்ளன. அதன்படி, மக்களவை நடவடிக்கைகள் பிற்பகல் 1.15 மணிக்கும், மாநிலங்களவை நடவடிக்கைகள் பிற்பகல் 2.15 மணிக்கும் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய வரலாற்றில் புதிய அத்தியாயமாக கருதப்படுகிறது. ஏற்கனவே, இந்த சிறப்புக் கூட்டத்தொடரில் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். அதன்படி, அடுத்த நான்கு நாட்களில் புதிய நாடாளுமன்றத்தில் பல முக்கிய மசோதாக்கள் நிறவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்ப்பை கிளப்பும் மசோதாக்கள்:
இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 8 மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்படும் என, அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மசோதாக்களின் விவாரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதோடு, நிகழ்ச்சி நிரலில் இல்லாத சில முக்கிய மசோதாக்கள் கூட தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை நிரூபிக்கும் விதமாக தான் மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களில், மகளிருக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதேபாணியில், மேலும் சில மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா
- இந்தியாவின் பெயரை “பாரதம்” என மாற்றுவது தொடர்பான மசோதா அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன
புதிய நாடாளுமன்ற விவரம்:
புதிய நாடாளுமன்ற கட்டடம் முக்கோண வடிவில் 4 மாடிகளை கொண்டு 971 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் மக்களவையில் 888 இருக்கைகளும், மாநிலங்களவையில் 348 இருக்கைகளும், கூட்டுக்கூட்டத்தை நடத்தும் வகையில் 1,272 இருக்கைகளும் இடம்பெற்றுள்ளன. பல்வேறு தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெற்றுள்ளன. அதன்படி, தமிழக சட்டப்பேரவையை போன்று அனைத்து உறுப்ப்னர்கள் முன்பும் ஒரு டேப்லட் வைக்கப்பட்டு காகிதமற்ற அவைகளாக இருக்கும் என்று கூறப்படுகிறது. புதிய நாடாளுமன்றத்தில் பத்திரிகையாளர்களுக்கு கடுமையான நுழைவு விதிகள் இருக்குமென்றும், எம்.பி-க்கள் பேசுவதற்காக ஒதுக்கப்பட்ட நேரம் முடிவடைந்ததும் தானாக மைக் ஆஃப் ஆகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.