பரபரப்பு! மோடிக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான்! இஸ்லாமாபாத் செல்கிறாரா இந்திய பிரதமர்?
இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
![பரபரப்பு! மோடிக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான்! இஸ்லாமாபாத் செல்கிறாரா இந்திய பிரதமர்? Pakistan invites PM Modi for SCO meet in October Know full details பரபரப்பு! மோடிக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான்! இஸ்லாமாபாத் செல்கிறாரா இந்திய பிரதமர்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/25/5f1570c691992f45e7b332d4078d959e1724557910253102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகளளை உள்ளடக்கியது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு. வர்த்தகம், பொருளாதார வளர்ச்சி, அமைதி உள்ளிட்ட பலவற்றிற்காக இந்த அமைப்புச் செயல்பட்டு வருகிறது.
மோடிக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான்:
இந்த அமைப்பின் மாநாடு அந்தந்த நாட்டு தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டிற்கான ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை பாகிஸ்தான் நடத்த உள்ளது. வரும் அக்டோபர் 15 மற்றும் 16ம் தேதி பாகிஸ்தான் நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது.
பிரதமராக பொறுப்பேற்றது முதலே மோடி இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்று வருகிறார். மக்களவைத் தேர்தல் காரணமாக உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அவர் பங்கேற்கவில்லை. இந்த சூழலில் பிரதமர் மோடிக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே பெரியளவில் சுமூகமான உறவு இல்லாத சூழலில் பாகிஸ்தான் இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருப்பது இரு நாட்டு அரசியலிலும், உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் செல்வாரா?
ஆனால், பிரதமர் மோடி பாகிஸ்தான் செல்லமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடிக்கு பதிலாக இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அல்லது வேறு ஏதேனும் பிரதிநிதிகள் பங்கேற்பார்களா? என்று இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. கடந்தாண்டு கிர்கிஸ்தானில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடிக்கு பதிலாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். இந்தியா மீது நடத்த முயற்சிக்கப்படும் தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட பல காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் சுமூகமான உறவு இல்லாமல் இருந்து வருகிறது. குறிப்பாக, புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்த நிலை இன்னும் தீவிரமாகியுள்ளது.
அதேசமயம், பிரதமர் மோடி பாகிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதால் இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை, தீவிரவாத பிரச்சினை தணியும் என்று பாகிஸ்தான் அரசு நம்புகிறது. இதனால், அந்த நாட்டு ஆளுங்கட்சிக்கும் சாதகமான சூழல் ஏற்படும் என்றும் அவர்கள் கருதுகின்றனர். மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான தனது பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சீனா இந்த மாநாட்டில் முயற்சிக்கும் என்றும் கருதப்படுகிறது. சீனாவின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடரந்து மறுப்பு தெரிவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)