Pakistan Twitter : பாகிஸ்தான் ட்விட்டர் கணக்கிற்கு இந்தியாவில் தடை... 6 மாதங்களில் 2-வது முறையாக நடவடிக்கை...! காரணம் என்ன?
பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
Pakistan Twitter : பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஷாபாஸ் ஷெரீஃப் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதனால் இந்தியாவில் உள்ள ட்விட்டர் பயனர்கள், @Govtogpakistan என்ற முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்கை பின்பற்றவும், பார்க்கவும் இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் கணக்கை முடக்க மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்தை வலியுறுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இந்தியா தவிர அமெரிக்கா, கனடா போன்ற இதர நாடுகளில் இருந்து பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை மற்றவர்கள் தொடர்ந்து பார்க்கவும், பின்பற்றவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவில் இருக்கும் பயனர்கள் பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் கணக்கை தேடும்போது, அந்த ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதை கூறும் தகவல் திரையில் தோன்றுகிறது. அரசு ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது.
முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. தொடர்ந்து சில நாட்களுக்கு பின் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், 6 மாதங்களில் மீண்டும் பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் கணக்கு 2வது முறையாக இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் துருக்கி, ஈரான், எகிப்து ஆகிய நாடுகளில் உள்ள பாகிஸ்தான் தூதரகங்களில் பல அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம், போலியான மற்றும் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக ஒரு முகநூல் பக்கத்தையும், 8 யூடியூப் சேனல்களையும் மத்திய அரசு முடக்க உத்தரவிட்டிருந்தது.
பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பதற்கு காரணம் கண்டறியப்படவில்லை. @Govtogpakistan என்ற ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க