Amit Shah: தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்.. திட்டவட்டமாக தெரிவித்த மத்திய அமைச்சர் அமித்ஷா..!
தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இந்தியாவின் வளர்ச்சியில் பங்கெடுத்தவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி ஒன்று தனியார் நிறுவனத்தால் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்தார். அவரை போலி என்கவுண்டர் வழக்கில் சிக்க வைக்க சிபிஐ மூலம் காங்கிரஸ் எனக்கு அழுத்தம் கொடுத்தது என தெரிவித்தார். மேலும் “மத்திய அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துகிறது” என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுவது சரியானது அல்ல என கூறினார்.
அதேசமயம் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையாக பாஜக வெற்றி பெறும் என தெரிவித்த அமித்ஷா, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவார் என தெரிவித்தார். அப்போது அவரிடம் அதிமுக குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும். அந்த கூட்டணியில் தான் இருக்கிறோம்” எனவும் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் அதிமுக கட்சியில் இணைந்தனர். கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்குள்ளே இந்த மாற்றம் நடந்தது பாஜகவினரை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி பலரும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தனர். இதற்கு பதிலடியாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பாஜகவுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
அதேசமயம் தூத்துக்குடியில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய அண்ணாமலை, “பாஜகவால் பறக்க முடியும். பாஜக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்து விட்டது. தமிழகத்தில் புரட்சிக்கான நேரம் வந்துவிட்டது” என தெரிவித்தார். இதனால் அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதோ என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில் அமித்ஷா கூட்டணி தொடரும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.