Pakistan : ஸ்ரீநகரில் வெடிச்சத்தம் ... பல்ஸ் செக் பண்ணும் பாக்கிஸ்தான் ; எகிறி அடிக்கும் இந்தியா ராணுவம்... !
புதுடெல்லி : போர் நிறுத்த அறிவிப்பு வெளியான சிலமணி நேரங்களில் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது பதற்றத்துக்கு வழிவகுத்துள்ளது.

புதுடெல்லி : போர் நிறுத்த அறிவிப்பு வெளியான சிலமணி நேரங்களில் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது பதற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் அனுப்பிய அனைத்து டிரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன.
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது.
இந்த நிலையில், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இதை இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் உறுதி செய்தன. இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்புகள் வெளியான அடுத்த சில மணி நேரங்களில் ஜம்மு காஷ்மீர் எல்வையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை நடத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நிறுத்த உடன்பாட்டை மீறி இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. சண்டை நிறுத்தம் என்று இரு நாடுகளும் அறிவித்த 3 மணி நேரத்தில் கதுவா, சுந்தர்பானி, அக்னூர், உதம்பூர், நவ்சேரா உள்ளிட்ட பல பகுதிகளில் பாகிஸ்தானின் இந்த அத்துமீறல் தொடர்ந்துள்ளது. பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கும் வகையில் பாக்., ராணுவம் தாக்கி வருகிறது. இதற்கு இந்தியாவும் உடனடி பதிலடி கொடுத்தது.
டிரோன்களை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்
ஜம்மு, ரியாஷி ,ஸ்ரீநகர், ரஜோரி, கந்தர்பால் பகுதிகளில் பாகிஸ்தான் டுரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது. ஸ்ரீநகரில் உள்ள ராணுவ தலைமையகத்தையும் தாக்க பாகிஸ்தான் முயற்சித்துள்ளது. ஆர்எஸ்புரா பகுதியில் சிறிய ரக ஆயுதங்கள் வெடிக்கும் சத்தம் கேட்டது. இதனையடுத்து அங்கு மின்சாரம் நிறுத்தப்பட்டு உள்ளது. நக்ரோட்டாவிலும் பாகிஸ்தான்., அனுப்பிய டிரோன்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
குஜராத்தின் கட்ச் பகுதியில் பல டிரோன்கள் வந்ததாக அம்மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார். இதில் 3 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. பஞ்சாபின் மோகா மாவட்டத்திலும் டுரோன் காரணமாக மின்தடை அமல்படுத்தப்பட்டது. பசில்கா, பாட்டியாலாவிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. அமிர்தசரஸ் பகுதியில் மக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் அனுப்பிய அனைத்து டுரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது.
ஒப்பந்தம் மீறல்:
இதனிடையே, பாகிஸ்தான் அத்துமீறிய நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசு வட்டாரங்கள், இன்று மாலை போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளது என தெரிவித்தன.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி ?
பாகிஸ்தானின் இந்த அத்துமீறலை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கண்டித்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவர் தமது பதிவில் கூறி உள்ளதாவது; சண்டை நிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் காஷ்மீரில் குண்டுசத்தம் கேட்கிறது. அங்கு என்ன நடக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளார். ராஜஸ்தானின் பார்மர் , ஜெய்சால்மர் , பஞ்சாபின் பிரோஸ்பூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் முழுவதுமாக நிறுத்தப்பட்டு உள்ளது.





















