"இந்தியாதான் எங்களுடைய பரம எதிரி" - பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் சர்ச்சை பேச்சு!
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி சையத் அசிம் முனீர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆளுப்போவது யார் என்பதை இந்த தேர்தல் தீர்மானித்துவிடும்.
பாகிஸ்தான் ராணுவ தளபதி பேசியது என்ன?
இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதி சையத் அசிம் முனீர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்று ரீதியாகவும் சமகால அரசியல் சூழல் காரணமாகவும் பாகிஸ்தானும் இந்தியாவும் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக, காஷ்மீர் பிரச்னை இரு நாடுகளுக்கு இடையே தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ளது. பாகிஸ்தானில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வுகளும் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல, இந்தியாவில் நடக்கும் அரசியல் நகர்வுகளை பாகிஸ்தான் உற்று கவனிக்கும்.
இப்படிப்பட்ட சூழலில், இந்தியாதான் தங்களுடைய பரம எதிரி என பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி தெரிவித்திருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.
"காஷ்மீருக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு வழங்கும்"
கைபர் பக்துன்க்வா மாகாணம் ரிசல்பூரில் உள்ள அஸ்கர் கான் அகாடமியில் பாகிஸ்தான் விமான படையின் அணிவகுப்பை ஏற்று கொண்டு பேசிய அவர், "தார்மீக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் காஷ்மீருக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு வழங்கும். இந்தியாதான் எங்களுடைய பரம எதிரி" என்றார்.
பாகிஸ்தான் அரசியலில் ராணுவத்தின் தலையீடும் நீதித்துறையின் செயல்பாடுகளில் உளவுத்துறையின் தலையீடு இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர், "எங்கள் அரசியலமைப்பின் வரம்புகளை நாங்கள் நன்கு அறிவோம். மற்றவர்களும் பாகிஸ்தான் அரசியலமைப்பை நிலைநிறுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.
India is our "arch rival", says Pakistan Army Chief General Syed Asim Munir as he recalls 2019 Indo Pak situation; Emphasizes Pakistan will continue to provide "moral, political, diplomatic support" for Kashmir. pic.twitter.com/2O5d1cEdJR
— Sidhant Sibal (@sidhant) May 2, 2024
இஸ்லாமியர்கள் குறித்தும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பற்றியும் இந்தியாவில் நடக்கும் தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் மோடி தொடர் சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, இன்றைய பிரச்சார கூட்டத்தில் பாகிஸ்தான் குறித்தும் பிரதமர் பேசியிருந்தார்.
குஜராத்தில் இன்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், "காங்கிரஸ் இந்தியாவில் பலவீனமடைந்து வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இங்கு காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கிறது. அங்கே பாகிஸ்தான் அழுகிறது. இப்போது பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். இளவரசரை (ராகுல் காந்தி) பிரதமராக்க பாகிஸ்தான் துடிக்கிறது" என்றார்.
இந்தியாவில் தேர்தல் நடக்கும் சூழலில் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி இப்படி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.