Pakistan: ஃபேஸ்புக் காதலனைச் சந்திக்க பாகிஸ்தான் சென்ற இந்தியப் பெண்.. திரும்பி வருவார் என காத்திருக்கும் கணவர்!
பாகிஸ்தானின் கைபர் பல்துன்வா மாகாணத்தில் உள்ள மான் நகரை சேர்ந்த 29 வயதான நஸ்ருல்லா கான் என்பவரை 35 வயது இந்திய பெண் அஞ்சு பேஸ்புக் மூலம் சந்தித்துள்ளார்.
பாகிஸ்தானின் கைபர் பல்துன்வா மாகாணத்தில் உள்ள மான் நகரை சேர்ந்த 29 வயதான நஸ்ருல்லா கான் என்பவரை 35 வயது இந்திய பெண் அஞ்சு பேஸ்புக் மூலம் சந்தித்துள்ளார். இருவரும் அடிக்கடி சாட் செய்து நண்பர்களாக பழகி வந்தனர். அவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில்தான், இருவரும் ஒன்றாக இணைந்து வாழ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அஞ்சுவை பாகிஸ்தானுக்கு வருமாறு நஸ்ருல்லா கான் கூறியுள்ளார். தனது காதலரின் அழைப்பின் பேரில், அஞ்சுவும் ஜூலை 21ஆம் தேதி பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த..
ராஜஸ்தான் மாநிலம் பிவாடி மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சு ஏற்கனவே திருமணமானவர். அஞ்சு கணவர் அரவிந்த் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அஞ்சுவின் சகோதரருடன் பிவாடியில் வாடகை குடியிருப்பில் வசித்து வருகின்றனர். அரவிந்த் பிவாடியில் பணிபுரிகிறார். அஞ்சு தனியார் நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
ஜெய்ப்பூருக்கு..
நஸ்ருல்லா கானுடன் ஃபேஸ்புக்கில் சாட்டிங்கில் இருந்த அஞ்சு, காதலனின் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் செல்ல முடிவு செய்துள்ளார். இந்நிலையில் ஜெய்ப்பூர் செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் அஞ்சு. ஆனால் தந்து மனைவி பாகிஸ்தானைச் சேர்ந்தவருடன் நண்பராக பழகி வந்தது கணவர் அரவிந்திற்கு ஏற்கனவே தெரிந்துள்ளது. தோழியுடன் ஜெய்ப்பூருக்குச் சென்று வருகிறேன் என்று கூறி அஞ்சு வீட்டை விட்டு வெளியேறியதாக கணவர் அரவிந்த் கூறுகிறார். ஜூலை 23 ஆம் தேதி மாலை 4 மணிக்கு அஞ்சு தனக்கு போன் செய்து தான் லாகூரில் இருப்பதாகவும், இரண்டு அல்லது மூன்று நாட்களில் திரும்பி வருவேன் என்றும் அரவிந்த் மேலும் கூறியுள்ளார். அஞ்சு தனது ஃபேஸ்புக் நண்பரைச் சந்திக்க பாகிஸ்தான் சென்றுள்ளார் என்ற செய்தியை அரவிந்த் அப்போதுதான் உணர்ந்துள்ளார். தன் மனைவி தன்னிடம் கண்டிப்பாக வருவார் என்றும் அவர் நம்பிக்கொண்டு உள்ளார்.
அனைத்து ஆவணங்களுடன் பாகிஸ்தானுக்கு பயணம்..
ஜெய்ப்பூர் செல்வதாக கூறி அஞ்சு பிவாடியில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் அவர் தனது 29 வயது ஃபேஸ்புக் காதலரான நஸ்ருல்லாவை சந்திக்க பாகிஸ்தானுக்கு சென்றதாக தகவல் வெளியாகிய நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய அஞ்சு முதலில் விமான நிலையத்தில் போலீஸ் காவலில் இருந்துள்ளார். ஆனால், அஞ்சுவின் பயண ஆவணங்கள் சரிபார்த்த பிறகு விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் செல்வதற்கான அனைத்து அனுமதி ஆவணங்களும் சரியாக இருந்ததைக் கண்டறிந்த பாதுகாப்புப் படையினர் அஞ்சுவை பாகிஸ்தான் செல்ல அனுமதித்துள்ளனர்.
கணவர் மற்றும் குழந்தைகளை விரும்பாமல் அஞ்சு பாகிஸ்தான் சென்றுள்ளது ராஜஸ்தானின் பிவாடி பகுதியில் பரபரப்பாக விவாதிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது. ஆனால் அவர் மீண்டும் வருவாரா என்பதில் எந்த தெளிவும் இல்லாத சூழலிலும் கணவன் அரவிந்த் தன் மனைவி வருவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். ஆனால் பாகிஸ்தான் சென்ற அஞ்சு அங்கு நஸ்ருல்லாவை சந்தித்தாரா இல்லையா என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.