Pahalgam Terrorist attack: பாக் மீது டிஜிட்டல் போர்... இறங்கி செய்யும் இந்தியா! எகிறும் பதற்றம்
Pahalgam Terrorist attack:பாகிஸ்தானின் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை இந்திய அரசு முடக்கியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை இந்திய அரசு முடக்கியுள்ளது. மத்திய அரசின் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்தியாவில் கணக்குகள் தடை செய்யப்பட்டவர்களில் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) தலைவர் மரியம் நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி ஆகியோர் அடங்குவர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் கணக்குகள் முடக்கம்
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்திற்கு மத்தியில், ஷெபாஸ் ஷெரீப்பின் யூடியூப் சேனலும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. "தேசிய பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கு தொடர்பான அரசாங்கத்தின் உத்தரவின் காரணமாக இந்த கணக்குகள் முடக்கப்பட்டதாக தெரிகிறது. அரசாங்க நீக்குதல் கோரிக்கைகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, கூகிள் வெளிப்படைத்தன்மை அறிக்கையைப் பார்வையிடவும்" என்று முடக்கப்பட்ட கணக்குகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல முக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. இவர்களில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாஹீன் அப்ரிடி, முகமது அமீர், நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோர் அடங்குவர். இந்திய அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் மெட்டா தளங்களில் இந்தத் தடை அமல்படுத்தப்பட்டது.
பிரபல பாகிஸ்தானிய நடிகர்களான மஹிரா கான், ஹனியா ஆமிர் மற்றும் அலி ஜாபர் ஆகியோரும் இந்தியாவில் தங்கள் இன்ஸ்டாகிராம் கணக்குகளும் முடக்கபட்டுள்ளது
பஹல்காம் அருகே உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சமீபத்தில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் ஆண்களைப் பிரித்து, சிலரை அவர்களின் மதம் குறித்து விசாரித்து, பின்னர் அவர்களை மிக அருகில் இருந்து சுட்டுக் கொன்றதாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்தனர்.
இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல், அட்டாரி நில எல்லையை மூடுதல் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாத தொடர்புகளைக் காரணம் காட்டி உறவுகளை குறைத்தல் உள்ளிட்ட பல கடும் நடவடிக்கைகளை இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக அறிவித்தது.
பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்தியது, பதிலுக்கு பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கு அதன் வான்வெளியை மூடியது. நீர் பகிர்வு ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் இந்தியாவின் நடவடிக்கையையும் பாகிஸ்தான் நிராகரித்தது, அத்தகைய எந்தவொரு நடவடிக்கையும் "போர் நடவடிக்கையாக" பார்க்கப்படும் என்று எச்சரித்தது.
கடந்த செவ்வாயன்று(29.04.25) பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பின் அதிகாரப்பூர்வ X (முன்னர் ட்விட்டர்) கணக்கையும் இந்திய அரசு முடக்கியது. தனியார் செய்தி நேர்காணலின் போது கவாஜா ஆசிப், பயங்கரவாத அமைப்புகளுடனான பாகிஸ்தானின் உறவுகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, "நாங்கள் சுமார் மூன்று தசாப்தங்களாக அமெரிக்காவிற்கும்... பிரிட்டன் உட்பட மேற்கு நாடுகளுக்கும் இந்த மோசமான வேலையைச் செய்து வருகிறோம்" என்று கூறினார்.
இந்திய அரசாங்கம், 63 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களை தடை செய்த ஒரு நாளுக்குப் பிறகு அமைச்சரின் X கணக்கைத் முடக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் டான் நியூஸ், ஏஆர்ஒய் நியூஸ், பிஓஎல் நியூஸ், ஜியோ நியூஸ், சாமா டிவி மற்றும் ஜிஎன்என் போன்ற முக்கிய பாகிஸ்தானிய செய்தி நிறுவனங்களும் அடங்கும். தடைசெய்யப்பட்ட சேனல்கள் ஆத்திரமூட்டும் மற்றும் வகுப்புவாத உணர்வுப்பூர்வமான உள்ளடக்கத்தைப் பரப்புவதாகக் கூறப்படுகிறது.






















