ஆக்ஷனில் இறங்கிய இந்திய வெளியுறவுத்துறை! என்ன செய்யப்போகிறது பாகிஸ்தான் தூதரகம்?
பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரிகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான முடிவுகள் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன. பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரி சாத் அகமது வாரியாச்சை அனுப்பி அரசின் முடிவுகள் விவரம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன.
காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவிலிருந்து திரும்பிய பிறகு, பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (CCS) இரண்டு மணி நேரக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு வெளியுறவுத்துறை அமைச்சகம், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். ராணுவம், கடற்படை, விமானப்படை அதிகாரிகள் வெளியேற ஒரு வாரம் அவகாசம் உள்ளது என அறிவிப்பு வெளியிட்டது.
பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தது.
ஏப்ரல் 22 ஆம் தேதி, அமெரிக்காவின் துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் இந்தியாவில் இருந்தபோதும், பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவிற்கு அரசு முறைப் பயணமாக இருந்தபோதும், பஹல்காமின் புகழ்பெற்ற பைசரன் புல்வெளியில் கொடிய தாக்குதல் நடத்தப்பட்டது. மோடி தனது பயணத்தை முடித்துக்கொண்டு புதன்கிழமை காலை புது டில்லிக்குத் திரும்பினார்.
"பாகிஸ்தானுக்கும் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு பிரிவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) செவ்வாய்க்கிழமை தாக்குதலுக்குப் பின்னால் இருப்பதாக நம்பப்படுகிறது. லஷ்கர்-இ-தொய்பாவின் உயர்மட்ட தளபதியான சைஃபுல்லா கசூரி, அல்லது காலித், இந்தத் தாக்குதலின் 'மூலதனமாக' இருப்பதாகக் கூறுகின்றன. இந்தக் கூற்றுகள் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு புது தில்லி எடுத்த நடவடிக்கைகளுக்கு தகுந்த பதிலடி கொடுப்பது குறித்து முடிவு செய்ய தேசிய பாதுகாப்புக் குழுவின் (NSC) கூட்டம் இன்று கூட்டப்பட்டுள்ளதாக ஆசிஃப் கூறினார். "பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தலைமையில் தேசிய பாதுகாப்புக் குழுவின் அமர்வு நடைபெறும்" என்று ஆசிஃப் தெரிவித்தார்.

