தமிழ்நாட்டை பாருங்க... பிற மாநிலங்களும் அதை செய்யுங்க - யுஜிசியின் முன்னாள் தலைவர் சுக்தேவ் தோரத்
நீட் மற்றும் இதர நுழைவுத் தேர்வுகள் சமூக கட்டுமானத்தின் ஓரத்தில் இருக்கும் விளிம்புநிலை மாணவர்களை புறக்கணிக்கிறது
தமிழ்நாட்டை முன்மாதிரியாகக் கொண்டு பிற மாநிலங்களும் நீட் நுழைவுத் தேர்வை எதிர்க்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்னாள் தலைவர் சுக்தேவ் தோரத் (Sukhadeo Thorat) தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சமூக-பொருளாதார சமத்துவத்திற்கான சங்கம் (Association for Social and Economic Equality) ஏற்பாடு செய்திருந்த காணொளி நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். பொது கல்விக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, சயனிக்க ஷா உள்ளிட்ட கல்வியாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சுக்தேவ் தோரத், "தேசிய கல்விக் கொள்கை அனைவரையும் உள்ளடக்கியதாக இல்லை. நீட் மற்றும் இதர நுழைவுத் தேர்வுகள் சமூக கட்டுமானத்தின் ஓரத்தில் இருக்கும் விளிம்புநிலை மாணவர்களை புறக்கணிக்கிறது. நாம் விழிப்புடன் இல்லை என்றால், அனைத்து நிலை படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வுகள் கட்டாயமாக்கப்படும். தமிழ்நாட்டை முன்மாதிரியாகக் கொண்டு பிற மாநிலங்களும் நீட் நுழைவுத் தேர்வை எதிர்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
பிரின்ஸ் கஜேந்திர பாபு பேசுகையில், " தேசியக் கல்விக் கொள்கை 2020 நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பல்கலைக்கழக மானியக் குழு ஏற்கனவே வரைவு தேசிய உயர்கல்வி தகுதி கட்டமைப்பு அறிக்கையை பலகலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. நீட், தேசியக் கல்விக் கொள்கை மூலம் சமூக வாழ்கையில் உரிய பங்கு பெற முடியாதவர்களாக உள்ள விளிம்புநிலை மனிதர்கள் புறக்கணிக்கப்படுவார்கள்.
பல்வேறு கல்வியாளர்களும், சமூக அமைப்புகளும் தேசிய கல்விக் கொள்கையைப் புறகணிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் இது முக்கிய விசயமாக உருவெடுத்தது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் புதிய தேசியக் கல்வி கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என்று குறிப்பிட்டிருந்தது. திமுகவின் மகத்தான வெற்றி மூலம் மாநில மக்களின் மனநிலையை நம்மால் புரிந்து கொள்ள முடியும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, நீட் தேர்வு பற்றி ஆராய மாநில அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் தலைமையில் குழு அமைத்தது. இந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், நீட் நுழைவுத்தேர்வுக்கு நிரந்தர விலக்குக்கோரும் மசோதவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றினார். இந்த நிறைவேற்றப்பட்ட மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதனையடுத்து, மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்