Priyanka Gandhi : தற்கொலை ஒன்னும் ஜோக் இல்ல.. பிரதமரைச் சாடிய பிரியங்கா காந்தி.. அப்படி என்னதான் சொன்னார்?
தற்கொலை குறித்து பிரதமர் மோடி ஜோக் அடித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உளவியல் பிரச்சனை காரணமாக நடக்கும் தற்கொலை சம்பவங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பும் வண்ணம் உள்ளது. தற்கொலைகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மனநல மருத்துவர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்கொலை குறித்து ஜோக் அடித்த பிரதமர் மோடி:
இந்த சூழ்நிலையில், தற்கொலை குறித்து பிரதமர் மோடி ஜோக் அடித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை குறித்தும் மன நல பிரச்னை குறித்தும் பிரதமர் மோடி கேலி செய்ததற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த புதன்கிழமை, தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, கதை ஒன்றை கூறினார். "தற்கொலை செய்து கொண்ட தன்னுடைய மகளின் கடிதத்தை பேராசிரியர் படித்து கொண்டிருந்தார். தவறு இன்றி எழுத வேண்டும் என எவ்வளவு சொல்லி கொடுத்தும் அந்த கடிதத்தில் எழுத்து பிழை இருந்ததை பேராசிரியர் கவனித்தார்" என தற்கொலை குறித்து மோடி நகைச்சுவையாக கூறினார்.
தற்கொலை போன்ற உளவியல் பிரச்னை குறித்து மோடி கேலி செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளார். "இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் விவகாரம் துயரமான விஷயம். கேலி செய்வதற்கான விஷயம் அல்ல" என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
வெளுத்து வாங்கிய பிரியங்கா காந்தி:
"மனச்சோர்வும் தற்கொலையும், குறிப்பாக இளைஞர்களிடையே நடக்கும் தற்கொலை சம்பவங்கள் நகைச்சுவையான விஷயம் அல்ல. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின்படி, 2021இல் 1,64,033 இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களில் பெரும் சதவீதம் பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள்" என்றும் பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "இந்தியாவில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள், தற்கொலை காரணமாக தங்களின் குழந்தைகளை இழக்கின்றனர். இதுகுறித்து பிரதமர் கேலி செய்திருக்கக் கூடாது" என்றார்.
"தற்கொலை போன்ற உணர்வுப்பூர்வமான பிரச்னையில் நாட்டின் பிரதமர் ஜோக் சொல்லும்போது பிரச்னை வெளிப்படுகிறது.
ஆனால், அவரின் நகைச்சுவைக்குப் பிறகு பலரும் கைதட்டுவது சிரிப்பது இன்னும் பயமுறுத்துகிறது. நாம் மிகவும் நோய்வாய்ப்பட்ட சமூகமாகிவிட்டோம். ஜெய் ஹிந்த்" என ராஷ்டிரிய ஜனதா தள கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜா விமர்சித்துள்ளார்.
உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா கட்சியின் துணை தலைவர் பிரியங்கா சதுர்வேதி, இதுகுறித்து கூறுகையில், "ஒரு தேசமாக மனச்சோர்வு மற்றும் மனநலப் பிரச்னைகளில் நாம் அதிக உணர்திறன் உடையவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் அவலநிலையை கேலி செய்யாமல் மாற்றத்தை நீங்கள் முன்நின்று நிகழ்த்தி காட்ட வேண்டும்" என்றார்.