Rahul Gandhi: 10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
Rahul Gandhi: நாடாளுமன்றத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த காரசார விவாதம், பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
Rahul Gandhi: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட அமைச்சர்கள் அவ்வப்போது குறுக்கிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மக்களவையில் அனல்பறந்த விவாதம்:
ம்க்களவையில் குடியரசு தலவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதல் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி முதல் முறையாக உரையாற்றினார். அவரது 100 நிமிட பேச்சில் அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கேள்விகளை எழுப்பியதால் அவையில் அனல் பறந்தது. கடந்த 10 ஆண்டுகளாக பெரும்பாலும் விவாதத்தில் நேரடியாக பங்கேற்காத பிரதமர் மோடி எழுந்து நின்று ராகுலின் பேச்சை குறுக்கிட்டார். அமித்ஷா உள்ளிட்ட 9 மூத்த அமைச்சர்கள் பலமுறை எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
காந்தியை திரைப்படம் காப்பாற்றியதா?
அவையில் பேசிய ராகுல் காந்தி, “உண்மையும், அகிம்சையும் மகாத்மா காந்தியின் யோசனைகள். கடவுளுடன் நேரடி தொடர்பு கொள்ளும் பிரதமர் மோடி, காந்தி இறந்து விட்டதாகவும், திரைப்படம் மூலமே உலகம் காந்தியை அறிகிறது என்றும் கூறுகிறார். இதிலிருந்து உங்கள் அறியாமையை புரிந்து கொள்ள முடிகிறதா? இந்து மதம் மட்டுமல்ல, இஸ்லாம், பவுத்தம், சமணம், சீக்கியம் என அனைத்து மதங்களும் தைரியத்தை போதிக்கின்றன. ஆனால் தங்களை இந்துக்கள் என்று கூறிக் கொள்பவர்கள் வன்முறை, வெறுப்பு, பொய்யை பற்றி மட்டுமே பேசுகிறார்கள். 24 மணி நேரமும் வெறுப்பை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இந்துக்களே அல்ல. பாஜவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள். அதனால்தான், ராமர் பிறந்த அயோத்திலேயே பாஜவுக்கு மக்கள் பாடம் கற்பித்து விட்டனர்.
தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டேன் - ராகுல் காந்தி
பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் தனிப்பட்ட முறையில் நான் தாக்கப்பட்டுள்ளேன். எனக்கு எதிராக 20க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. எனது வீட்டை எடுத்துக் கொண்டனர். அமலாக்கத்துறையால் 55 மணி நேரம் விசாரிக்கப்பட்டேன்.
நீட் தேர்வு யாருக்கானது?
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு என்பது தொழில்முறை தேர்வு அல்ல. அது பணக்காரர்களுக்காக உருவாக்கப்பட்ட வியாபாரத் தேர்வு. கடந்த 7 ஆண்டுகளில் 70 இடங்களில் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது. ஒரு சிறந்த மாணவரால் நீட் தேர்வில் முதலிடம் பெற முடியும், ஆனால் அவரிடம் பணம் இல்லையென்றால் மருத்துவக் கல்லூரிக்கு செல்ல முடியாது. இது முழுமையாக பணக்கார மாணவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
அக்னிவீர் திட்டம்:
ராணுவத்திற்கு வீரர்களை நியமிக்கும் அக்னிபாதை திட்டம் ராணுவம் கொண்டு வந்ததல்ல. அது மோடியின் திட்டம். மோடி அரசு அக்னிவீரர்களை பயன்படுத்திக் கொண்டு தூக்கி எறியும் தொழிலாளர்களாக கருதுகிறது. அவர்களுக்கு தியாகி அந்தஸ்தைக் கூட வழங்கவில்லை.
குஜராத்தில் வீழ்த்தப்படுவீர்கள் - ராகுல்
மணிப்பூரில் எதுவும் நடக்காதது போல் பாஜ அரசு செயல்படுகிறது. மணிப்பூரில் உள்நாட்டு போரை தூண்டிவிட்டுள்ளீர்கள். உங்களாலும், உங்கள் கொள்கைகளாலும், உங்கள் அரசியலாலும் மணிப்பூர் எரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி இந்தியாவில் மணிப்பூர் என்கிற ஒரு மாநிலமே இல்லை என்பது போல் இருக்கிறார். எழுதிவைத்துக் கொள்ளுங்கள், குஜராத்தில் காங்கிரஸ் விரைவில் உங்களை வீழ்த்தும்.
சபாநாயகர் மீது அட்டாக்:
சபாநாயகர் மக்களவையின் இறுதி நடுவர். சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் செல்ல நாங்கள் வந்த போது, என்னிடம் நீங்கள் நிமிர்ந்து நின்றபடி கை குலுக்கினீர்கள். அதுவே பிரதமர் மோடியிடம் குனிந்து கைகுலுக்கினீர்கள். ஏன் இந்த பாரபட்சம்?’’ என்றார். பிறகு பதிலளித்து பேசிய சபாநாயகர் ஓம்பிர்லா, ”பெரியவர்களுக்கு தலைவணங்க வேண்டும், சமமானவர்களை சமமாக நடத்த வேண்டும் என்கிற மரபை கற்பிக்கின்றன. அதன்படி நடக்கறேன்” என விளக்கமளித்தார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, ‘‘இந்த அவையில் சபாநாயகரை விட யாரும் பெரியவர் இல்லை. அனைவரும் அவருக்குதான் தலைவணங்க வேண்டும். எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் சபாநாயகருக்கு அடிபணிகிறோம். நீங்கள் சொல்வதை கேட்கிறோம். அதே சமயம் அவையை நியாயமாக நடத்த வேண்டியதும் முக்கியம்”’ என ராகுல் காந்தி 100 நிமிடங்களுக்கு நீண்ட நெடிய மிக முக்கியத்தும் வாய்ந்த உரையையாற்றினர்.
குறுக்கிட்ட பிரதமர் மோடி:
இந்துக்கள் பற்றி ராகுல் பேசிய போது குறுக்கிட்ட பிரதமர் மோடி, ‘‘ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என்று விமர்சிப்பது தீவிரமான பிரச்னை’’ என்றார். இந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டுமென அமித்ஷா கூறினார். இதுதவிர 4 மத்திய அமைச்சர்களும் ராகுலின் பேச்சுக்கிடையே பலமுறை குறுக்கிட்டு பதிலளித்தனர்.
50 முறை குறுக்கிட்ட அமைச்சர்கள்:
ராகுல்காந்தி பேசும் போது மோடி உள்ளிட்ட பாஜக எம்பிக்கள் 50 முறை குறுக்கிட்டனர். நரேந்திர மோடி இரண்டு முறை, அமித் ஷா 4 முறை, ராஜ்நாத் சிங் 3 முறை, கிரண் ரிஜிஜு 6 முறையும், சிவராஜ் சிங் சவுகான் 3 முறையும், அனுராக் தாக்கூர் 6 முறையும், அஸ்வினி வைஷ்ணவ் 4 முறையும், நிஷிகாந்த் துபே 10க்கும் மேற்பட்ட முறையும், பூபேந்திர யாதவ் 5 முறையும் குறுக்கிட்டனர். ஆனாலும் தொடர்ந்து வலுவாக தனது கேள்விகளை ராகுல் காந்தி முன்வைத்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக பாஜக தனிப்பெரும்பான்மை ஆட்சி நடைபெற்ற போது இதுபோன்ற காரசார விவாதங்கள் எதுவும் பெரிதாக அரங்கேறவில்லை. ஆனால், மக்களவையில் எதிர்க்கட்சிகள் இருப்பதால் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான விவாதங்களை இனி அதிகம் காண முடியும், இதுபோன்ற விவாதங்கள் மக்களுக்கு நன்மை பயக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.