பிராமணர்கள் மட்டுமே பிரசாதம் செய்ய வேண்டும்! நிபந்தனையை வாபஸ் பெற்றது சபரிமலை தேவசம் போர்டு…
உண்ணியப்பம், வெல்ல நைவேத்தியம், சர்க்கரை பாயசம், அவல் பிரசாதம் போன்றவற்றை மலையாள பிராமணர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று முன்பு தேவசம் போர்டு சார்பில் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது.
மலையாள பிராமணர்கள் மட்டுமே பிரசாதம் தயாரிக்க வேண்டும் என்று சபரிமலை தேவசம் போர்டு வெளியிட்ட விளம்பரம் சர்சையானதை தொடர்ந்து, அந்த நிபந்தனையை வாபஸ் பெற்று இன்று ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டு உள்ளது சபரிமலை தேசவம் போர்டு. அதன்படி சபரிமலை ஐயப்பன் கோவிலில் மலையாள பிராமணர்கள் மட்டுமே நைவேத்தியம், பிரசாதம் தயாரிக்க வேண்டும் என்ற நிபந்தனை தற்போது விலக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில்
இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஸ்தலங்களில் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலும் ஒன்று. இந்த கோயிலுக்கு உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள். கார்த்திகை மாதத்தில் வெகு விமரிசையாக திகழும். தமிழகத்திலிருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து ஐயப்பனைத் தரிசிப்பார்கள். இந்த கோயில் என்றாலே சர்ச்சை கூடவே இருந்து வரும். பல காலங்களாக சபரிமைலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என்று இருந்த விதியும் சர்சைக்குள்ளாகி, பல திருப்பங்களை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிராமணர்கள் மட்டுமே செய்ய வேண்டும்
இந்த பிரசித்தி பெற்ற கோவிலில் மண்டல - மகரவிளக்கு பூஜை நிகழ்வையொட்டி, உண்ணியப்பம், வெல்ல நைவேத்தியம், சர்க்கரை பாயசம், அவல் பிரசாதம் போன்றவற்றை மலையாள பிராமணர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று முன்பு தேவசம் போர்டு சார்பில் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. இந்த விளம்பரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பலர் சமூக வலைத்தளங்களில் இதற்கு எதிராக கருத்துகளை தெரிவித்தனர்.
சமத்துவத்திற்கு எதிரானது
அதிலும் குறிப்பாக, அம்பேத்கர் கலாசார மன்றத்தின் தலைவர் சிவன் கதலி, "குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே, ஒரு விஷயத்திற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பு, விளம்பரம் கொடுப்பது சமத்துவக் கொள்கைக்கு எதிரானது", என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அனைத்து சாதியினரும் தயாரிக்கலாம்
சிவன் கதலி இதுதொடர்பாக கேரள அரசுக்கும் மனித உரிமை ஆணையத்துக்கும் புகார் அனுப்பியிருந்தார். இந்த நிலையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதியான இன்று சபரிமலை தேவசம் போர்டு மற்றொரு விளம்பரத்தை வெளியிட்டது. அதில் மலையாள பிராமணர்கள் மட்டும் பிரசாதம் தயாரிக்க வேண்டும் என்ற நிபந்தனையை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து சாதியினரும் அங்கு பிரசாதம் தயாரிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வரவேற்றிருக்கும் அம்பேத்கர் கலாசார மன்றத் தலைவர் சிவன் கதலி, “நீண்ட நாட்களுக்கு பிறகு தேவசம் போர்டின், நிலை மாறியிருப்பது புதிய விஷயங்களுக்கு பலம் சேர்த்திருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்