Omicron Cases India: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 653ஆக உயர்வு: அலர்ட் மக்களே!
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 653ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவின் பிடியிலிருந்து வெளியே வந்த உலகம் தற்போது ஒமிக்ரானின் பிடியில் சிக்க ஆரம்பித்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸானது தற்போது 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த சூழலில் ஒமிக்ரான் தொற்று டெல்டா வைரஸைவிட 70 மடங்கு அதிகம் பரவும் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 30க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஒமிக்ரானை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 653ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மகாராஷ்டிராவில் 167 பேருக்கும், டெல்லியில் 165 பேருக்கும், கேரளாவில் 57 பேருக்கும், தெலங்கானாவில் 55 பேருக்கும், குஜராத்தில் 49 பேருக்கும், ராஜஸ்தானில் 46 பேருக்கும், தமிழ்நாட்டில் 34 பேருக்கும், கர்நாடகத்தில் 31 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், மத்திய பிரதேசத்தில் 9 பேருக்கும், ஒடிசாவில் 8 பேருக்கும், ஆந்திராவில் 6 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் 6 பேருக்கும், ஹரியானாவில் 4 பேருக்கும், உத்தரகாண்ட்டில் 4 பேருக்கும், சண்டிகாரில் 3 பேருக்கும், காஷ்மீரில் 3 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 2 பேருக்கும், கோவாவில் ஒருவருக்கும், இமாச்சல பிரதேசத்தில் ஒருவருக்கும், லடாக்கில் ஒருவருக்கும், மணிப்பூரில் ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 167 பேரில் இதுவரை 61 பேரும், டெல்லியில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 165 பேரில் 23 பேரும் குணமடைந்துள்ளனர்.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் ஒமிக்ரான் தொற்றால் மீண்டும் முழு நேரம் லாக்டவுன் போடப்பட்டுவிடுமோ என்ற அச்சத்திற்கு மக்கள் ஆளாகியுள்ளனர். அதேசமயம், வெளிநாட்டிலிருந்து வருபவர்களால்தான் ஒமிக்ரான் அதிகளவு பரவுகிறது என்ற கருத்து ஒன்று நிலவுவதால் விமான நிலையங்களில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: ஒமிக்ரான் அறிகுறி கண்டறியப்பட்ட பெண்ணின் தந்தைக்கு கொரோனா தொற்று பாதிப்பு
kareena kapoor Covid-19: கரீனா கப்பூருக்கு ஒமிக்ரான் தொற்றா? மரபணு வரிசை செய்ய முடிவு