Omicron and Oil Demand | ஓமிக்ரான் பரவல், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு - எப்படி புரிந்துகொள்வது?
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் அமெரிக்க பொருளாதாரம் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. அதில் குறிப்பாக கச்சா எண்ணெய் தேவை மீட்சி அங்கு காணப்படுகிறது
புதிய உருமாறிய ஓமிக்ரான் கொரோனா பெருந்தொற்று காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கணிசமாக சரியத் தொடங்கியுள்ளது. கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் 80 அமெரிக்க டாலராக இருந்த கச்சா எண்ணெயின் விலை, மாத இறுதியில் 70.86 அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. மேலும், அமெரிக்கா போன்ற நாடுகளின் நிர்பந்தத்தால் ஒபெக்+ எனப்படும் ரஷ்யா உள்ளிட்ட பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பு உற்பத்தி கட்டுப்பாடுகளை நீக்க முடிவு செய்துள்ளதால், கச்சா எண்ணெய் விலையை சரியத் தொடங்கும் என்று எதர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் தொற்று இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. பரவும் வேகம் தீவிரமாக இருக்கும் என்பதால் இதனை உலக சுகாதார அமைப்பு கவலையளிக்கக்கூடிய வகை என்று அறிவித்தது. இந்த தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் செயல்படாது என்பதற்கு எந்த ஆதாராமும் இல்லை என்றாலும், அதன் ஸ்பைக் புரதத்தில் ஏற்பட்டுள்ள மூலக்கூறுகள் மாற்றம், தடுப்பூசியின் செயல்திறனைக் குறைக்கக் கூடும் என்று கணக்கிடப்படுகிறது. எனவே, மீண்டும் ஒருமுறை வழக்கமான சர்வதேச பொருளாதாரச் செயல்பாடுகள் சீர்குலைக்கப்படலாம், இதன் விளைவாக கச்சா எண்ணெய் பொருள்களுக்கான தேவையில் பெரும் சரிவு ஏற்படலாம் என்று சந்தை முதலீட்டாளர்கள் கணிக்கின்றனர். இதன் காரணமாக, கச்சா எண்ணெயின் விலை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது.
அமெரிக்க அரசியல்: கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் அமெரிக்க பொருளாதாரம் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. அதில் குறிப்பாக கச்சா எண்ணெய் தேவை மீட்சி அங்கு காணப்படுகிறது. கடந்த மாதங்களில் மிகவும் முன்னேற்றத்துடன் காணப்பட்ட கச்சா எண்ணெய் விலை ஏற்றம் அதற்கு மிகப்பெரிய சவாலாக உருவானது. அமெரிக்காவின் நிர்பந்தத்தின் பேரில், அடுத்த ஜனவரியில் இருந்து நாளொன்றுக்கு 400,000 பேரலாக உற்பத்தியை அதிகரிக்க ஒபேக்+ நாடுகள் முடிவெடுத்திருந்தன.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை மட்டுப்படுத்த சேமிப்புக் கிடங்குகளில் இருந்து 50 மில்லியன் மெட்ரிக் டன்களை சந்தையில் விற்கப்போவதாக அறிவித்தது. கச்சா எண்ணெய் பயன்படுத்தும் 3வது பெரிய நாடான இந்தியாவும் தன் பங்குக்கு தன் சேமிப்புக் கிடங்குகளில் உள்ள 5 மில்லியன் மெட்ரிக் டன்களை வெளியிடுவது குறித்து கலந்தாடி வருவதாக தெரிவித்தது. இதற்கிடையில், ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கணிசமாக சரியத் தொடங்கியுள்ளது.
பெட்ரோல்/டீசல் மேலும் குறையுமா? இந்தியாவில், எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் சர்வதேச விலைகளைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் செயல்பட்டும் வரும் சர்வதேச சந்தையில் விலை குறைந்தாலும், அதன் பயன்களை நுகர்வோருக்கு வழங்குவதில்லை. உதாரணமாக, கொரோனா முதல் பொதுமுடக்கத்தின் போது , சர்வதேச சந்தையில் கச்சா விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. ஆனால், பெட்ரோல்/டீசல் விலையை 83 நாட்கள் குறைக்காமலே இருந்து வந்தன.
Inflation: எகிறும் உதிரிப்பொருட்களின் விலை.. விடாமல் துரத்தும் பணவீக்கம்.. பாதிப்பு யார் யாருக்கு?
முன்னதாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை முறையே ரூ 5 மற்றும் ரூ 10 குறைக்கும் முடிவை மத்திய அரசு எடுத்தது. இந்த முடிவுக்குப் பிறகு, சர்வதேச அளவில் பேரல் விலை குறைந்தாலும், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்,டீசல் விலையைக் குறைக்காமலே இருந்து வருகின்றன.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு, நுகர்வை அதிகரிக்கும் மற்றும் பணவீக்கத்தைக் குறைக்கும். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும். ஒட்டுமொத்த பொருளாதாரச் சுழற்சியை மேலும் தூண்டும் என்றும் நம்பப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்