Red Ant Chutney: இரும்புச்சத்து நிறைந்த உணவு.. சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு..
Red Ant Chutney: சிவப்பு எறும்பு சட்னி சாப்பிடுவதால் உள்ள நன்மைகள் என்னென்னவென்று சொல்லப்படுகிறது? பார்க்கலாம்.
ஒடிசா மாநிலத்தில் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பிரபல உணவான சிவப்பு எறும்பு சட்னிக்கு (Red Ant Chutney) புவிசார் குறியீடு (GI) வழங்கப்பட்டுள்ளது.
பூச்சிகள் வகைகளில் சிலவற்றை உணவாக சாப்பிடும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. நமக்கு சிவப்பு நிற எறும்புகளை கண்டாலே கடித்துவிடும் என்ற அச்சம் ஏற்படும். ஆனால், மயூர்பஞ்ச (Mayurbhanj) மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் சிவப்பு எறும்பை சட்னி செய்து சாப்பிடுவர். இது இந்திய மக்களின் ஒரு முக்கியமான உணவாக உள்ளது. கார சாரமாக சிவப்பு எறும்பு சட்னியை மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். சிவப்பு எறும்பு சட்னியின் பயன் என்ன? அதற்கு புவிசார் குறியீடு கொடுக்கப்பட்டதன் முக்கியத்துவம் உள்ளிட்டவற்றை இக்கட்டுரையில் காணலாம்.
புவிசார் குறியீடு
புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் தோன்றிய அல்லது அந்த இடத்தைச் சேர்ந்ததற்கான அடையாளமாக கருதப்படுவதற்கு வழங்கப்படும். குறிப்பிட்ட இடத்தின் பண்புகளால் உருவான தரம் வாய்ந்த பொருட்களுக்கு, புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இந்தியாவில் புவிசார் குறியீடானது, புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 1999ன் அடிப்படையில் வழங்கப்படுகிறது. மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அறிவுசார் சொத்துரிமை துறை, அதற்கான அங்கீகாரத்தை வழங்குகிறது.
புவிசார் குறியீடானது கைவினைப் பொருட்கள், விவசாய பொருட்கள், தொழில்துறை பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு வழங்கப்படுகிறது. அந்த பொருட்கள் இயற்கையானவையாக இருக்கலாம் அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம். இந்தியாவில் முதல் புவிசார் குறியீடு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த டார்ஜிலிங் தேயிலைக்கு வழங்கப்பட்டது.
சிவப்பு எறும்பு சட்னி ( Red Weaver Ant Chutney )
எறும்பு சட்னி அதிகம் விரும்பப்படக் காரணம், அதில் அதிக அளவு புரதம், கால்சியம், ஜிங்க், வைட்டமின் பி-12, இரும்புச் சத்து, மக்னீசியம், பொட்டாசியம், சோடியம் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மரங்களில் உள்ள சிவப்பு எறும்புகளை சேகரித்து அதிலிருந்து சட்னி தயாரித்து சாப்பிடுவர். இது Similipal kai chutney என்று அழைக்கப்படுகிறது. இந்த அளவுக்கு சத்துக்கள் நிறைந்த எறும்பு சட்னிக்கு, புவிசார் குறியீடு பெற ’Mayurbhanj Kai Society Limited ' நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உணவுப் பட்டியலின் கீழ் விண்ணப்பம் செய்திருந்தனர். மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் சார்பில் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்னியில் புரதம், கால்சியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்களை அடங்கியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது.
மேலும் சுறுசுறுப்பையும் அதிகரிக்கிறது என கருதப்படுகிறது. சிவப்பு எறும்பு உடன் உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு உள்ளிட்டவைகள் வைத்து அரைத்து சாப்பிடலாம். ஜிங்க், இரும்புச் சத்து, அமினோ அமிலங்கள் இதில் உள்ளதாகவும் மூளை வளர்ச்சிக்கும் உதவுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மன உளைச்சல், மயக்கம், மறதி உள்ளிட்டவற்றை சரிசெய்ய சிவப்பு எறும்பு சட்னி தீர்வாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
புவிசார் குறியீட்டின் முக்கியத்துவம்
- புவிசார் குறியீடு வாடிக்கையாளர்களுக்கு தயாரிப்பின் நம்பகத்தன்மை மற்றும் தரத்தை உறுதி செய்கிறது.
- கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் கைவினைஞர்கள் தங்கள் தயாரிப்புகளுக்கான அங்கீகாரத்தைப் பெறவும், சிறந்த வாழ்வாதாரங்களை பெறவும் புவிசார் குறியீடு உதவுகிறது.
- தனித்துவமான உள்ளூர் தயாரிப்புகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், சுற்றுலா பயணிகளை அந்த பொருட்களின் பிறப்பிடங்களை நோக்கி பார்வையிட ஈர்ப்பதன் மூலமும் சுற்றுலாவை ஊக்குவிக்கிறது.
- இந்தியாவுக்கு தனித்துவமான தயாரிப்புகளுக்கு தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை வழங்குகின்றன, இது உலகெங்கிலும் நாட்டின் பிராண்டிங்குக்கு பங்களிக்கிறது.
- தயாரிப்புடன் தொடர்புடைய பாரம்பரியத்தை பாதுகாக்க உதவுகிறது, மேலும் அத்தகைய அறிவின் நன்மைகள், தலைமுறைகளாக பாதுகாத்து வரும் சமூகங்களுக்கு செல்வதை உறுதி செய்கிறது.
- ஏற்றுமதியை ஊக்குவிக்க வழி வகுக்கிறது.
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.