தெருவில் சுற்றித்திரிந்த பசுவின் வயிற்றில் இருந்து 30 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அகற்றிய மருத்துவர்கள்!
அந்த பசு, பொதுமக்கள் பாலித்தீன் பைகளில் வீசிய எஞ்சிய பொருட்களை சாப்பிட்டு வந்த நிலையில், உணவு செரித்து, பிளாஸ்டிக் மட்டும் அப்படியே இருந்து குடலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
தெருவில் சுற்றித்திரிந்த மாட்டின் வயிற்றில் இருந்து சுமார் 30 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றினர்.
பசுவின் வயிற்றில் இருந்து 30 கிலோ பிளாஸ்டிக்
சத்ய நாராயண் கர் தலைமையிலான கால்நடை மருத்துவர்கள் குழு நான்கு மணி நேரம் போராடி செய்த அறுவை சிகிச்சை மூலம் சுமார் 10 வயது கொண்ட பசுவின் வயிற்றில் இருந்து செரிக்காமல் தேங்கி இருந்த, 30 கிலோ பாலித்தீன் பைகளை அகற்றியதாக கஞ்சம் மாவட்ட முதன்மை கால்நடை மருத்துவர் மனோஜ் குமார் சாஹு தகவல் தெரிவித்தார். அந்த பசு, பொதுமக்கள் பாலித்தீன் பைகளில் வீசிய எஞ்சிய பொருட்களை சாப்பிட்டு வந்த நிலையில், உணவு செரித்து, பிளாஸ்டிக் மட்டும் அப்படியே இருந்து குடலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த மக்கள்
இன்னும் சில காலம் இதனை கவனிக்காமல் இருந்திருந்தால் அந்த மாடு இறந்திருக்கும் என்று மருத்துவர் சத்ய நாராயண் கர் கூறினார். பசு தற்போது நலமாக உள்ளது என்றும், ஒரு வாரம் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிற்க கூட முடியாமல் அந்த மாடு சிரமப்படுவதை கண்ட மக்கள் சிலர் மாட்டின் ஆபத்தான நிலை குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளனர். பாதிக்கபட்ட அந்த மாடு கடந்த திங்கள்கிழமை மாலை, கிரி சாலையில் இருந்து விலங்குகள் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டது.
தலைமை மருத்துவர்
“மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது மாடு ஆபத்தான நிலையில் இருந்தது. மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதில் அதற்கு சிக்கல் இருந்தது. வலியால் அதன் வயிற்றை உதைத்துக்கொண்டது. மருத்துவப் பரிசோதனையில் அதன் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியது தெரியவந்தது” என்றார் மருத்துவர் சத்ய நாராயண் கர். கடந்த ஆண்டு, இங்கு சுற்றித் திரிந்த மாடு ஒன்றில் இருந்து சுமார் 15 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக ஆர்வலர்கள் கருத்து
பிளாஸ்டிக்கின் பயன்பாடு மற்றும் உற்பத்திக்கு அரசாங்கம் தடை விதித்துள்ள போதிலும், பிளாஸ்டிக் மாசுபாட்டின் தீவிரத்தை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது என்று ஆர்யபட் அறக்கட்டளையின் நிறுவனர் சுதிர் ரௌட் கூறினார். "தடையை முறையாக அமல்படுத்துமாறு பெர்ஹாம்பூர் முனிசிபல் கார்ப்பரேஷனிடம் நாங்கள் முறையிட்டோம்" என்று ரூட் கூறினார். குப்பைத் தொட்டிகளில் கிடைக்கும் எதையும் சாப்பிடும் தெரு விலங்குகளின் ஆரோக்கியத்தில் பிளாஸ்டிக் பைகள் ஏற்படுத்தும் விளைவுகளையும் இது எடுத்துக்காட்டுகிறது என்று விலங்கு ஆர்வலர் லலதேந்து சவுத்ரி கூறினார்.