Chitra Ramakrishna : போனை ஒட்டு கேட்ட விவகாரம்...சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு பிணை வழங்கிய உயர் நீதிமன்றம்..!
தேசிய பங்குச்சந்தை அதிகாரிகளின் போனை சட்டவிரோதமாக ஒட்டு கேட்டு உளவு பார்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிணை வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குநராகவும் தலைமை செயல் அதிகாரியாகவும் பொறுப்பு வகித்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. இவர் தற்போது அந்த பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
இவர், தேசிய பங்குச்சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பு வகித்தபோது பங்குச்சந்தைகளை கையாளுதலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த 2018ஆம் ஆண்டு, தேசிய பங்குச்சந்தையின் சர்வர் கட்டமைப்பை தவறாக பயன்படுத்தியதாக கூறி இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சர்வரை தவறாக பயன்படுத்திய தரகர்களுக்கு சந்தைத் தரவை முன்கூட்டியே வழங்க பங்குசந்தை தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
அதுமட்டும் இன்றி, இமயமலையில் வசிக்கும் முகம் தெரியாத ஆன்மீக சாமியார் ஒருவருடன், பங்குச் சந்தையின் நிதிக் கணிப்புகள், வணிகத் திட்டங்கள் மற்றும் போர்டு நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக சித்ரா ராமகிருஷ்ணன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
இமயமலையில் வசிக்கும் ஆன்மீக சாமியாரின் ஆலோசனையின் கீழ் சித்ரா ராம்கிருஷ்ணா எடுத்த முடிவுகளில், எந்த மூலதன சந்தை அனுபவமும் இல்லாத ஆனந்த் சுப்ரமணியன் என்ற நிர்வாகியை ஆலோசகராகவும், என்.எஸ்.இ-ன் இயக்க அதிகாரியாகவும் நியமித்தது தொடர்பாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பப்பட்டது.
தேசிய பங்குச்சந்தை அதிகாரிகளின் போனை சட்டவிரோதமாக ஒட்டு கேட்டு உளவு பார்த்ததாகவும் வேறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவை முதலில் சிபிஐ கைது செய்த நிலையில், பின்னர், அமலாக்கத்துறை அதே வழக்கில் கைது செய்தது. இதையடுத்து, சிபிஐ தொடர்ந்து வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது.
இந்நிலையில், சித்ரா ராம்கிருஷ்ணாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இந்தச் சதியின் பின்னணியில் அவர்தான் மூளையாக செயல்பட்டார் என்ற அடிப்படையில் தற்போதைய வழக்கில் அவரது ஜாமீன் மனுவை அமலாக்கத்துறை இயக்குனரகம் (ED) எதிர்த்தது.
ஆனால், சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் யாவும் தனக்கு எதிராக சுமத்தப்படவில்லை என்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த குற்றச்சாட்டுகள் வரவில்லை என்றும் சித்ரா ராமகிருஷ்ணா தரப்பு வாதிட்டது.
போனை ஓட்டு கேட்ட விவகாரத்தை பொறுத்தவரையில், 2009 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், தேசிய பங்குச்சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ரவி நரேன், நிர்வாக துணைத் தலைவர் ரவி வாரணாசி, தலைவர் (தலைமை அலுவலகம்) மகேஷ் ஹல்திபூர் உள்ளிட்டோர் இணைந்து தேசிய பங்குச்சந்தை மற்றும் அதன் ஊழியர்களை ஏமாற்ற சதி செய்தனர்.
iSEC சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை பயன்படுத்தி ஊழியர்களின் போன் காலை சட்டவிரோதமாக இடைமறித்த உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.