Karnataka CM: "சால்வைகள் பூங்கொத்துகள் வேண்டாம்… புத்தகங்களே போதும்.." முதலமைச்சர் சித்தராமையா வேண்டுகோள்..!
மக்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த விரும்பினால் புத்தகங்களை கொடுக்கலாம். உங்கள் அன்பும் பாசமும் என் மீது தொடர்ந்து இருக்கட்டும் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட நிலையில், மக்கள் அவருக்கு பூங்கொத்து, சால்வைகளை கொடுக்க வேண்டாம் என்றும், புத்தகங்களை கொடுங்கள் என்றும் கூறியுள்ளார்.
பூங்கொத்து சால்வைகள் வேண்டாம்
இது குறித்து சித்தராமையா தனது ட்விட்டர் பதிவில், "அடிக்கடி மரியாதை செலுத்தும் நபர்களிடம் இருந்து பூங்கொத்து அல்லது சால்வைகளை வாங்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். மக்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த விரும்பினால் புத்தகங்களை கொடுக்கலாம். ஏதாவது பரிசுகள் வடிவில் மரியாதை செய்யலாம். உங்கள் அன்பும் பாசமும் என் மீது தொடர்ந்து இருக்கட்டும்," என்று எழுதியிருந்தார்.
தேர்தலுக்கு முன் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 5 உத்தரவாதங்களுக்கு காங்கிரஸ் அரசு கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வர் சித்தராமையா சனிக்கிழமை தெரிவித்தார். முதலமைச்சர் பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
I have decided not to accept flowers or shawls from people who often give it as a mark of respect.
— Siddaramaiah (@siddaramaiah) May 21, 2023
This is for during both personal and public events.
People can give books if they want to express their love and respect in the form of gifts.
May all your love and affection…
அறிவித்த திட்டங்களுக்கு ஆகும் செலவு
ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க, க்ரிஹ ஜோதி திட்டத்தை செயல்படுத்த ரூ.1,200 கோடி தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.2,000, அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் 10 கிலோ அரிசியும், நடப்பு கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற வேலையில்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகள் வரை ரூ.3,000ம், டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500ம் வழங்கப்படும். மாநிலத்தில் வசிக்கும் பெண்களுக்கு அரசு பஸ்களில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
ஆண்டுக்கு ரூ.50,000 கோடி தேவை
வழிகாட்டுதல்கள் விரிவாக உருவாக்கப்பட்டு, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். மேலும் மே 22 முதல் 24 வரை சட்டமன்றக் கூட்டத்தை கூட்டவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும், ஜூலை மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். முதற்கட்ட மதிப்பீடுகளின்படி, 5 உத்தரவாதங்களை நிறைவேற்ற ஆண்டுக்கு ரூ.50,000 கோடி தேவைப்படுகிறது, என்றார். இந்திரா கேன்டீன் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அவை தொடங்கப்படும் என்றும் முதல்வர் கூறினார்.
விரைவில் நிறைவேற்றப்படும்
கடந்த ஆட்சிக் காலத்தில் தேர்தல் அறிக்கையில் 165 வாக்குறுதிகளில் 158 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுடன் 30 க்கும் மேற்பட்ட புதிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் என்று புதிதாக பதவியேற்ற முதல்வர் சித்தாமையா கூறினார்.
இந்திரா கேண்டீன், கடன் தள்ளுபடி, வித்யா சிறீ, ஷூ பாக்யா, பசு பாக்யா போன்றவை தேர்தல் அறிக்கையில் இடம்பெறவில்லை. “நாங்கள் அறிவித்த உத்திரவாதத் திட்டங்கள் நம் மாநிலத்தை பெரும் கடனில் தள்ளும் என்றும், இதுபோன்ற திட்டங்களைத் தொடங்குவதன் மூலம் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும், மாநிலம் பெரும் கடன்களைச் சுமக்கும் என்றும் பிரதமரே தனது மன் கி பாத் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு மக்களை ஏமாற்றி வருகிறார். எங்கள் கணக்கீடுகளின்படி, இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த ஆண்டுதோறும் ரூ. 50,000 கோடி தேவைப்படுகிறது, அதற்கான வளங்களைத் திரட்டுவது சாத்தியமற்றது அல்ல" என்று முதல்வர் கூறினார்.