Vijay Won Award: தீ தளபதி.. சிறந்த நடிகருக்கான விருதை வென்ற விஜய்..! என்ன படம் தெரியுமா?
ஒசகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த நடிகருக்கான விருதிற்கு நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒசகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த நடிகருக்கான விருதிற்கு நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாஸ்டர் படத்திற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒசாகா விழா:
ஜப்பான் நாட்டில் தமிழ் மக்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் திரை படைப்புகளையும் பொதுமக்கள் மிகவும் விரும்பி பார்க்கின்றனர். அதைதொடர்ந்து, இரு பிராந்திய மக்களுக்கு இடையேயான உறவை மேலும் வலுவடையச் செய்யும் வகையில் ஒசாகா தமிழ் திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. ஓசாகா தமிழ் திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் வருடத்தின் குளிர் கால தொடக்கத்தில் நிகழும். அந்த வகையில் தான் நடப்பாண்டு விருதாளர்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிறந்த நடிகருக்கான விருது:
அந்த பட்டியலில் சிறந்த நடிகருக்கான விருது விஜய்க்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கடந்த 2021ம் ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தில் நடித்ததற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் திரைக்கு வந்த, பெரிய ஹீரோவின் படம் மாஸ்டர். விஜய் சேதுபதி, மாளவிக மோகனன் என பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து இருந்தனர். வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மற்ற விருதாளர்களின் விவரங்கள்:
தலைவி படத்துக்காக சிறந்த நடிகை விருது கங்கனா ரணாவத்திற்கு வழங்கப்பட உள்ளது. சிறந்த படமாக சார்பட்டா பரம்பரை படத்துக்கும் சார்பட்டா பரம்பரை படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது இயக்குநர் பா.ரஞ்சித்துக்கும், மாநாடு படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது யுவன் ஷங்கர் ராஜாவுக்கும், ஜெய் பீம் படத்துக்காக சிறந்த துணை நடிகர் விருது மணிகண்டனுக்கும் மாநாடு படத்துக்காக சிறந்த திரைக்கதை விருது இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் வழங்கப்படவிருக்கிறது.
சிறந்த ஒளிப்பதிவாளர் விருது கர்ணன் படத்தில் பணியாற்றிய தேனி ஈஸ்வருக்கும், சிறந்த நடன இயக்குனர் விருது மாஸ்டர் படத்தில் வாத்தி படத்தில் பணியாற்றிய தினேஷ் மாஸ்டருக்கும் வழங்கப்பட உள்ளது. சிறந்த துணை நடிகைக்கான விருது ஜெய்பீம் படத்தில் நடித்த லொஜோமோல் ஜோஸும், மாஸ்டர் படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த வில்லன் விருதும் வழங்கப்படுகிறது. சிறந்த கலை இயக்குனர் விருது சார்பட்டா பரம்பரை படத்தில் பணியாற்றிய த. ராமலிங்கத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த குழந்தை நட்சத்திரம் ஆகிய விருதுகளை, முறையே டாக்டர் படத்தில் நடித்த கிங்ஸ்லே மற்றும் சாரா வினீத் ஆகியோர் கைப்பற்றியுள்ளனர்.