India- Srilanka-China: ”சீனா கப்பலுக்கு அனுமதி வழங்கவில்லை, இந்தியாவின் நிலைப்பாடு எங்களுக்கு முக்கியம்” - இலங்கை அரசு
சீன கப்பலை அடுத்த மாதம் இலங்கையில் நிறுத்த அனுமதி வழங்கவில்லை என, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நிலைப்பாடு இலங்கைக்கு முக்கியமானது என, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி பேசியுள்ளார்.
இலங்கை அரசு மறுப்பு
சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 அக்டோபர் மாதம் மீண்டும் இலங்கைக்கு வர உள்ளதாக தகவல் வெளியானது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி விளக்கமளித்தார். அதன்படி, "இலங்கையில் தனது கப்பலை நிறுத்துவதற்கு சீனாவுக்கு அனுமதி வழங்கவில்லை. இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு இலங்கைக்கு முக்கியமானது.
எனக்கு தெரிந்தவரை, அக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு வருவதற்கு சீன கப்பலுக்கு நாங்கள் அனுமதி வழங்கவில்லை. பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. ஆனால், சட்டபூர்வமான இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான நிலைப்பாடு எங்களுக்கு மிக மிக முக்கியமானவை. நாங்கள் எப்போதும் எங்கள் பிராந்தியத்தை அமைதி மண்டலமாக வைத்திருக்க விரும்புகிறோம்.
இதுதொடர்பான பேச்சுவார்த்தை என்பது கடந்த சில காலங்களாகவே நடைபெற்று வருகிறது. இந்தியா நீண்ட காலமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. வெளிநாட்டு கப்பல்களுக்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறையை கொண்டு வந்துள்ளோம். அதை உருவாக்கும் போது, இந்தியா உட்பட பல நண்பர்களிடம் ஆலோசனை கேட்டோம். அந்த வழிமுறைகளுக்கு இணங்கும் வரை, எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என அலி சப்ரி கூறினார்.
ஆய்வு நடத்துகிறதா சீனா?
சீன ஆராய்ச்சிக் கப்பல் அடுத்த மாதம் இலங்கை வந்து தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்துடன் (NARA) இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கையை தளமாகக் கொண்ட நாளேட்டில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக அமெரிக்க அரசும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருந்தது.
இந்தியாவின் நிலைப்பாடு:
சீனக் கடற்படையின் யுவான் வாங்-5 கடந்தாண்டு இலங்கையின் அம்பந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தது. ஆராய்ச்சி கப்பலாக கூறப்படும் இது, சீனக் கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் வகையில் கடல் படுக்கையை வரைபடமாக்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. அதோடு, இந்தியாவின் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளையும் அந்த கப்பம் மூலம் ஆய்வு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதனால், இலங்கை துறைமுகத்தில் சீன கப்பல் நிறுத்தப்படுவது குறித்து இந்தியா தனது பாதுகாப்பு நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியது. இந்நிலையில், சீன உளவுக் கப்பலான யுவான் வாங்-5 இலங்கையில் நிறுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, அக்டோபரில் ஷி யான் 6 கப்பல் இலங்கை வர உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்று, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார். மேலும், இந்தியாவின் பாதுகாப்பை தொடர்பான எந்தவொரு நடவடிக்கை தொடர்பாகவும், அறிந்துகொள்ள நாங்கள் ஆர்வம் காட்டுவோம் என ஏற்கனவே கூறியிருந்தார்.