PM Modi: அடுத்த 3 மாதங்களுக்கு மன் கி பாத் நிகழ்ச்சி கிடையாது! பிரதமர் மோடி சொன்ன காரணம்!
நாடாளுமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு ’மன் கி பாத் நிகழ்ச்சி’ மூன்று மாதங்களுக்கு நிறுத்தப்படலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக அக்டோபர் 3-ஆம் தேதி மன் கி பாத் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 11 மணி முதல் 11.30 மணி மணி வரை மன் கி பாத் (மனதின் குரல்) என்ற தலைப்பில் இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு ஹிந்தியில் உரையாற்றி வருகிறார் மோடி.
"3 மாதங்களுக்கு மன் கி பாத் நிகழ்ச்சி இல்லை"
இந்த நிலையில், ’மன் கி பாத்' நிகழ்ச்சியில் 110வது எபிசோடில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு ’மன் கி பாத் நிகழ்ச்சி’ மூன்று மாதங்களுக்கு நிறுத்தப்படலாம். ஆனால், நாட்டின் சாதனைகள் நிற்க போவதில்லை. சமூகம் மற்றம் நாட்டின் சாதனைகளை 'மன் கி பாத்' என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளத்தில் பதிவிடுகள்.
அடுத்த முறை நான் உரையாடுவது ’மன் கி பாத்' நிகழ்ச்சியின் 111வது பகுதியாக இருக்கும். அடுத்த முறை 'மன் கி பாத்’ நிகழ்ச்சியின் 111வது பகுதி எண்ணுடன் தொடங்கும். அதுவரை 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் குறும்படங்களை இணையத்தில் பகிருங்கள். அடுத்த முறை உங்களோடு உரையாடும்போது, புதிய சக்தி, புதிய தகவல்களோடு சந்திப்பேன்" என்றார்.
முதல்முறை வாக்களர்களுக்கு மோடி வேண்டுகோள்:
தொடர்ந்து பேசிய அவர், "அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்முறை வாக்காளர்கள் பெருவாரியான எண்ணிக்கையில் வாக்களிக்க கேட்டுக் கொள்கிறேன். திரைத்துறை, தொழில், பிற வல்லுநர்கள், இன்ஸ்டாகிராம் யூசர்கள், யூடியூப் பயனர்கள், நிபுணர்கள் என அனைவரும் முதல் முறையாக வாக்களிக்கும் நமது வாக்களர்களை ஊக்கப்படுத்துங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நாட்டில் பெண்களின் சக்தி ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றத்தின் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. இயற்கை விவசாயம், நீர் சேமிப்பு, தூய்மை போன்றவற்றில் நாட்டின் பெண்கள் தங்களது தலைமைப் பண்புகளை வெளிப்படுத்தியுள்ளனர். இன்று நாட்டில் பெண்கள் பின்தங்கிய துறைகளில் இல்லை.
நமது தேசத்தில் கிராமங்களில் வசிக்கும் பெண்கள் அனைவரும் ட்ரோன்களை இயக்குவார்கள் என்று சில ஆண்டுகள் முன்பு வரை யாராவது கற்பனை செய்து பார்த்திருப்பார்களா. ஆனால், இன்று இது சாத்தியமாகி உள்ளது. சில நாட்களுக்கு பிறகு மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாட இருக்கிறோம்.
இந்த தினத்தில், தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பெண்கள் சக்தியின் பங்களிப்பைப் போற்றும் சந்தர்ப்பத்தை நமக்கு அளிக்கிறது. பெண்கள் சம வாய்ப்பு கிடைக்கும்போது உலகம் தன்னிறைவு பெற்றதாகும் என்று மகாகவி பாரதியார் கூறியிருக்கிறார்” என்றார் பிரதமர் மோடி.