பிரம்மாஸ்திரத்தை எடுத்த பாஜக! சிக்னல் கொடுக்கும் நிதிஷ் குமார்! கதை ஓவர் ஓவர்!
மறைந்த பிகார் முதலமைச்சரும் சோசலிச தலைவர்களில் ஒருவருமான கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது I.N.D.I.A கூட்டணியில் புதிய புயலை கிளப்பியுள்ளது.
தேசிய அளவில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார். ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த இவர், பிகார் மாநில முதலமைச்சராக 8 முறை பதவி வகித்துள்ளார். பாஜகவுக்கு எதிரான I.N.D.I.A கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய இவர், ஒரு காலத்தில் பாஜகவுடன் நெருக்கமான உறவை பேணி வந்தார்.
கூட்டணி மாறுகிறாரா நிதிஷ் குமார்?
அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வேளாண் துறை தொடங்கி ரயில்வே வரை பல முக்கிய துறைகளை தன் வசம் வைத்திருந்தார். 2005ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை, பிகார் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தார். பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
மக்களவைத் தேர்தல் தோல்வியை தொடர்ந்து, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், கட்சியில் சலசலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் முதலமைச்சரானார். 2015ஆம் ஆண்டு, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், பரம எதிரியாக கருதப்படும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் லாலுவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.
தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, மீண்டும் முதலமைச்சரானார். ராஷ்டிரிய ஜனதா தள கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி மெகா கூட்டணியில் இருந்து வெளியேறினார். பின்னர், மீண்டும், பாஜகவுடன் கைகோர்த்தார். பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.
தன்னுடைய கட்சியை உடைக்க பாஜக முயற்சிப்பதாகக் கூறி, பாஜகவுடனான கூட்டணியில் இருந்து மீண்டும் விலகி லாலுவுடன் கைகோர்த்தார். இப்படி, மாறி மாறி கூட்டணி வைத்த நிதிஷ், பாஜகவுக்கு எதிராக 28 எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A கூட்டணியை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார்.
பாஜக எடுத்த பிரம்மாஸ்திரம்:
I.N.D.I.A கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், சமீப காலமாக, நிதிஷ் குமார் செய்து வரும் செயல்கள் கூட்டணி கட்சிகளுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, I.N.D.I.A கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை ஏற்க மறுத்த சம்பவம் பேசுபொருளானது. அவர் மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்வாரோ என கேள்விகளை எழுப்பியது.
இந்த நிலையில், மறைந்த பிகார் முதலமைச்சரும் சோசலிச தலைவர்களில் ஒருவருமான கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது I.N.D.I.A கூட்டணியில் புதிய புயலை கிளப்பியுள்ளது. ஒரு நல்ல முடிவை எடுத்திருப்பதாக பாஜகவுக்கு நிதிஷ் குமார் பாராட்டு தெரிவித்திருப்பது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
"முன்னாள் முதலமைச்சரும், மாபெரும் சோசலிஸ்ட் தலைவருமான மறைந்த கர்பூரி தாக்கூருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்குவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இது மத்திய அரசின் நல்ல முடிவு" என எக்ஸ் தளத்தில் நிதிஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு நேர்மாறாக பாஜக மீது விமர்சனத்தை முன்வைத்துள்ளது நிதிஷ் குமாரின் கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம். இதுகுறித்து அக்கட்சியை சேர்ந்த மிருத்யுஞ்சய் திவாரி பேசுகையில், "கர்பூரி தாக்கூர் உயிருடன் இருந்தபோது பாஜக அவரை வார்த்தைகளால் திட்டியது. 9 ஆண்டுகளாக அவரை நினைவில் கொள்ளவில்லை.
எங்கள் கட்சியும் தலைவர் லாலு யாதவும் அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் கர்பூரி தாக்கூரை நினைவு கூர்ந்து அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குகிறார்கள். வாக்குகளுக்காக அவரை நினைவுகூருகிறார்கள்" என்றார்.