Nitish Kumar: 8வது முறையாக முதல்வர் - யார் இந்த நிதிஷ் குமார்…? 15 ஆண்டுகள் பீகாருக்கு என்ன செய்தார்?
நிதிஷ் குமார் இதுவரை பீகார் முதல்வராக சுமார் 15 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார் நிதிஷ்குமார். பீகார் மாநில அரசியல் வரலாற்றில் நீண்டகாலம் முதல்வராக சாதனையை வைத்துள்ளார்.
8-வது முறையாக பீகார் மாநில முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) தலைவர் நிதிஷ் குமார் இன்று பதவியேற்றார். நேற்று அவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஜேடியு, ஆர்ஜேடி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட 7 கட்சிகளின் கூட்டணி அரசு இன்று பதவியேற்றது. முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவி ஏற்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு பிகார் சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
முதல்வர் பதவி ராஜினாமா
பாஜக உடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தது முதல் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தன. பாட்னாவில் நடைபெற்ற ஜே.டி.யு. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் கூட்டத்தில் பேசிய முதல்வர் நிதிஷ் குமார், பாஜக நமது கட்சியை அவமதித்துவிட்டது, உடைக்க முயற்சி செய்தது, எனவே பாஜக உடனான கூட்டணியை முறிக்கிறோம். முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அறிவித்தார்.
வளர்ச்சி
1951ஆம் ஆண்டு பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள பக்தியார்பூர் என்னும் ஊரில் பிறந்தவர் நிதிஷ் குமார். இவரது தந்தை கவிராஜ் ராம் லக்கன் சிங் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். இன்ஜினியரிங் படித்த அவர், பீகார் மாநில மின்சார வாரியத்தில் அரசுப் பணியில் சேர்ந்தார். நிதிஷ் குமார், அவருடைய அரசியல் ஆர்வம் காரணமாக அரசுப் பணியில் இருந்து விலகி, அரசியலில் ஈடுபட்டார். ஜெயப்பிரகாஷ் நாராயணனின் இயக்கத்தில் பங்கு கொண்டு செயல்பட்டார். அதன் பிறகு, சத்யேந்திர நரேன் சின்ஹா தலைமையிலான ஜனதா கட்சியில் இணைந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து பிரிந்து வந்த சமதா கட்சியில் செயல்பட்டார்.
தேர்தல்களும் அமைச்சர் பதவிகளும்
நிதிஷ் குமார் 1977, 1980 ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியை தழுவினார். 1985-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதல்முறையாக வெற்றி பெற்றார். 1996ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆனது மட்டுமின்றி, ரயில்வே அமைச்சர் பதவியைப் பெற்றார். பின்னர், 1998-99ல் வாஜ்பாய் தலைமையில் ஆன பாஜக அரசில் விவசாயத்துறை அமைச்சராகவும் இருந்தார். ஆகஸ்ட் 1999-ல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 2001 இல் இருந்து மே 2004 வரை நிதிஷ் குமார் மீண்டும், ரயில்வே அமைச்சராக இருந்தார். ரயில்வே அமைச்சராக இருந்த அந்த குறுகிய காலகட்டத்தில், 2002-லேயே ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதி போன்ற பரவலான சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். முன்பதிவு டிக்கெட் முறை மற்றும் தட்கல் முறையை கொண்டு வந்தது இவர்தான்.
முதல்வர் பதவி
முதல் முறையாக 2000-ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி முதல் வெறும் 7 நாட்கள் மட்டுமே பீகார் முதல்வராக இருந்தார் நிதிஷ் குமார். அப்போது நடந்த தேர்தலில் பாஜக மற்றும் லாலு கட்சிகள் இரண்டுமே தனிப்பெரும்பான்மைக்கான 163 தொகுதிகளை பெறவில்லை. பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு 151 எம்எல்ஏக்-களும், லாலு பிரசாத் யாதவுக்கு 159 எம்எல்ஏக்-களும் இருந்தனர். அப்போது, தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்பே ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார். அதன் பின்னர் 2003ஆம் ஆண்டில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரானார். 2005 தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பீகார் மாநில முதல்வர் ஆனார், அதுவே அவர் நீண்ட நாட்கள் முதல்வராக இருந்த முதல் முறை. அதைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டிலும் வெற்றிபெற்று முதல்வர் ஆனார். 2014 லோக்சபா தேர்தலில் அவரது கட்சி மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அடுத்த ஆண்டே, மீண்டும் முதலமைச்சரானார்.
15 ஆண்டுகள் பீகார் முதல்வர்
2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்டு வென்று மீண்டும் முதல்வரான அவர் இதுவரை பீகார் முதல்வராக சுமார் 15 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார் நிதிஷ்குமார், பீகார் மாநில அரசியல் வரலாற்றில் நீண்டகாலம் முதல்வராக சாதனையை வைத்துள்ளார். இன்னும் மூன்று ஆண்டுகள் இருந்த நிலையில் பாஜக உடன் ஏற்பட கருத்து வேறுபாடு காரணமாக பதவி விலகி, தற்போது காங்கிரஸ் உடன் இணைந்து முதல்வர் ஆகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்