Nitish Kumar: செய்தியாளர்களை கைகளை கூப்பி வணங்கிய பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் - நடந்தது என்ன?
Nitish Kumar: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் செய்தியாளர்களை கைகளை கூப்பி வணங்கிய வீடியோ, இணையத்தில் வைரலாகியுள்ளது.
Nitish Kumar: ஊடகங்களுடன் பேச மறுப்பது ஏன் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, நிதீஷ் குமார் சுவாரஸ்யமாக பதில் அளித்துள்ளார்.
சர்ச்சையில் சிக்கிய நிதிஷ் குமார்:
பீகாரில் நடைபெற்ற சாதி வாரி கணக்கெடுப்பின் முடிவுகளை கடந்த வாரம், முதலமைச்சர் நிதிஷ் குமார் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது, மக்கள் தொகை கட்டுப்படுத்தல் திட்டம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது, பெண்கள் மத்தியில் உள்ள பாலியல் கல்வி தொடர்பான தெளிவு தான் இதற்கு காரணம் என பேசியிருந்தார். அதோடு, அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜித்தன் ராம் மஞ்சி தொடர்பாகவும் ஆவேசமாக பேசியிருந்தார். இதில் பாலியல் கல்வி தொடர்பாக பேசியது பெரும் சர்ச்சையானது. பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்வினையாற்றின. இதையடுத்து, தனது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக நிதிஷ் குமார் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
#WATCH | As he leaves after paying tributes to former PM Pandit Jawaharlal Nehru in Patna, Bihar CM Nitish Kumar bows with folded hands before media personnel when reporters ask him why he was upset with them. pic.twitter.com/7b1Ilo8MSt
— ANI (@ANI) November 14, 2023
செய்தியாளர்களை வணங்கிய நிதிஷ் குமார்:
இந்த சம்பவங்களை தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே நிதிஷ் குமார் ஊடகங்களை சந்திக்காமல் உள்ளார். இதற்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் தான், நாட்டின் முதல் பிரதமரான நேருவின் பிறந்தநாளையொட்டி, பாட்னாவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் பங்கேற்று மரியாதை செலுத்தினார். அங்கிருந்து புறப்பட்டபோது, ”எங்களுடன் உங்களுக்கு என்ன மனவருத்தம் ஏன் எங்களை சந்திப்பதில்லை” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் ஏதும் அளிக்காத நிதிஷ் குமார், இருகரங்களையும் கூப்பி தலையை வணங்கி கும்பிட்டார். அப்போது உடனிருந்த நபர் குறுக்கே வர, அவரை விலக்கி விட்டு மீண்டும் இருகரங்களையும் கூப்பி தலையை வணங்கி சிரித்தபடி கும்பிட்டு விட்டு, காரில் ஏறி அங்கிருந்து சென்றார். இந்த செயல் செய்தியாளர்கள் இடையே குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
காரணம் என்ன?
பீகாரில் நீண்ட கால முதலமைச்சர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான நிதிஷ் குமார், பெண்கள் பற்றிய பேசிய விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தின் இரண்டு அவைகளிலும் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். இருப்பினும் அவரது பேச்சினை எதிர்க்கட்சியினர் தற்போது வரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்து, ஏதேனும் பேசினால் மீண்டும் சர்ச்சை பெரிதாகலாம் என நிதிஷ்குமார் நம்புவதாக தெரிகிறது. சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளதால், சர்ச்சைகளை தவிர்க்கும் நோக்கில் நிதிஷ் குமார் செய்தியாளர் சந்திப்பை தவிர்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.