Watch Video: நிர்மலா சீதாராமன் காருக்கு குறுக்கே திடீரென வந்த காங்கிரஸ் தொண்டர்கள்! பதறிய போலீசார்!
தெலங்கானாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் காரை காங்கிரஸ் தொண்டர்கள் வழி மறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தெலங்கானா மாநிலத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் காரை காங்கிரஸ் தொண்டர்கள் வழி மறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் கார் வழிமறிப்பு:
விலை வாசி உயர்வு காரணமாக போராட்டம் நடத்தி வந்த காங்கிரஸ் தரப்பினர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் காரை மறித்தனர். இதனால அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு போலீசார் போராட்டக்காரர்களை அப்புறபடுத்தினர். அதையடுத்து நிர்மலா சீதாராமன் புறப்பட்டுச் சென்றார்.
Telangana State Youth Congress blockaded Finance Minister Nirmala Sitharaman's car protesting the rise in prices in the country .#Congress#NirmalaSitharamanpic.twitter.com/p5aL2Vmmd4
— Sidharth Aarav (@Araav052) September 3, 2022
தெலங்கானா சுற்றுப்பயணம்:
பாஜகவின் “லோக்சபா பிரவாஸ் யோஜனா” திட்டத்தின் ஒரு பகுதியாக, அடுத்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள தெலங்கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். விலைவாசி உயர்வு, கூட்டாட்சி போன்ற விவகாரங்களை முன்வைத்து சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, பாஜகவை கடுமையாக சாடி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தெலங்கானாவில் உள்ள ரேஷன் கடை, மத்திய அரசுக்கும் சந்திரசேகர ராவு அரசுக்கும் இடையேயான புதிய அரசியல் களமாக மாறியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெள்ளிக்கிழமை பிர்கூரில் உள்ள ஒரு ரேஷன் கடைக்கு சென்றுள்ளார். அங்கு, "மோடி படம் இல்லாதது" அவரின் கவனத்துக்கு வந்துள்ளது.
கண்கூடாக எரிச்சலடைந்த நிர்மலா சீதாராமன், ரேஷன் கடைகளில் மோடியின் படத்தை ஏன் வைக்கவில்லை என அங்கு கூடியிருந்த பயனாளிகள் முன்பே கேட்டுள்ளார். அப்போது, பொதுமக்களிடம் பேசிய அவர், "வெளிச்சந்தையில் ஒரு கிலோ அரிசி ரூ. 35க்கு விற்கப்படுகிறது. ஆனால் அது உங்களுக்கு ரூ. 1க்கு வழங்கப்படுகிறது. இதற்காக, மத்திய அரசு தோராயமாக ரூ. 30 செலவு செய்யும் நிலையில், மாநில அரசு ரூ. 4 மட்டுமே வழங்குகிறது.
கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து, மோடி அரசாங்கம் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஐந்து கிலோ அரிசியை இலவசமாக வழங்கி வருகிறது. அனைத்து தளவாட, சேமிப்பு செலவுகள் ஆகியவற்றை மத்திய அரசு ஏற்று வருகிறது. பெரிய தலைவரின் (பிரதமர் மோடி) படத்தை தெலங்கானாவில் வைப்பதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்?" என கேள்வி எழுப்பினார்.
ரேஷன் கடைகளில் மோடியின் படங்களை சந்திரசேகர ராவ் அரசு நிராகரிப்பதாகவும், பிரதமரின் ஃபிளக்ஸ்கள் வைக்கப்படும் போது அது கிழிக்கப்பட்டு சேதப்படுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். உடனடியாக அவருடன் வந்திருந்த காமரெட்டி மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பாட்டீலுக்கு, கடைகளில் பிரதமரின் படங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு உத்தரவிட்டார்.
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் காரை காங்கிரஸ் தரப்பினர், மறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.





















