‛ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் அதிகரிப்பு’ தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பில் தகவல்!
சமீபத்திய தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின் மூலமாக இந்தியாவில் பெரும்பாலானோர் ஆண் குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கு முக்கியத்துவம் வழங்குவதாகத் தெரிய வந்துள்ளது.
சமீபத்திய தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின் மூலமாக இந்தியாவில் பெரும்பாலானோர் ஆண் குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கு முக்கியத்துவம் வழங்குவதாகத் தெரிய வந்துள்ளது. இதில் மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்தவர்களுள் பெரும்பான்மையானோர் பெண் குழந்தைகள் பெற்றுக் கொள்ள விரும்புவதாகவும் தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் 15 முதல் 49 வரையிலான நபர்களுள் திருமணம் செய்திருப்பவர்களுள் அதிகமானோர் பெண் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை விட ஆண் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், தன் குழந்தைகளுள் ஆண் குழந்தைகள் வைத்திருப்போர் கூடுதலாக குழந்தைகள் பெற்றுக் கொள்வதை விரும்பவில்லை என்பதையும், அதே வேளையில் ஆண் குழந்தைகள் இல்லாதோர் கூடுதலாக குழந்தைகள் பெற்றுக் கொள்ள விரும்புவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. இத்தனை விருப்பங்களுக்குப் பிறகும், இந்தியாவில் பெரும்பாலானோர் ஒரு குடும்பம் என்பது குறைந்தது ஒரு பெண் குழந்தையையாவது கொண்டிருக்க வேண்டும் என நம்புவதாகவும் தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் திருமணமான ஆண்களுள் 16 சதவிகிதம் பேர் பெண் குழந்தைகளை விட அதிக எண்ணிக்கையில் ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள விரும்புகின்றனர்; இதனை விட சுமார் நான்கு முறை குறைவாக 4 சதவிகிதம் பேர் ஆண் குழந்தைகளை விட அதிக எண்ணிக்கையில் பெண் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள விரும்புகின்றனர்.
திருமணமாக பெண்களில் 15 சதவிகிதம் பேர் அதிக ஆண் குழந்தைகளையும், 3 சதவிகிதம் பேர் அதிக பெண் குழந்தைகளையும் பெற்றுக் கொள்ள விரும்புகின்றனர்.
இந்தியாவில் ஆண்களும் பெண்களும் சராசரியாக 2.1 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள விரும்புகின்றனர். இது 1 ஆண் குழந்தை, 0.9 பெண் குழந்தை, 0.2 எண்ணிக்கையில் இரண்டு பாலினங்களில் எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வோர் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதமும் 2.1 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015-16ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பில் குடும்பங்களில் 2.2 குழந்தைகள் பெற்றுக் கொள்வது விரும்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மிசோரம், லட்சத்தீவுகள், மணிப்பூர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆண்களும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பெண்களும் அதிகமாக ஆண் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை விரும்புவதாகக் கூறப்பட்டுள்ளது. பிற மாநிலங்கள், பாலினங்கள் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில், மேகாலயாவைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே அதிகளவில் தாங்கள் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தியாவிலேயே சுமார் 11 சதவிகிதம் அளவுக்கு, அதிகமான ஆண்கள் பெண் குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கு முக்கியத்துவம் வழங்குகின்றனர்.
மேகாலயாவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அங்கெலா ரங்கத் இதுகுறித்து பேசிய போது, `நாங்கள் தாய்வழிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனினும், முக்கியமான விவகாரங்கள், குறிப்பாக அரசியல் ரீதியாக, ஆண்களே அதிகமாக இருக்கின்றனர். எங்கள் சமூகம் தாய்வழிச் சமூகம் என்பதால் தான் பின்தங்கியிருப்பதாக எண்ணும் ஆண்கள் இங்கே அதிகம்’ எனக் கூறியுள்ளார்.