
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Chennai Weather Forecast: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பரவலாக மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஃபெங்கல் புயல்
வங்கக் கடலில் நிலைகொண்ட காற்றழுத்தத் தாழ்வு மையம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மையமாக உருமாறி உள்ளது. நாளை (நவ.27) புயலாகவும் உருமாற உள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் பெயரை சவுதி அரேபியா பரிந்துரை செய்து இருந்தது.
மிக கன மழை பெய்ய வாய்ப்பு
இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை 3.7 மீ வரை கடல் அலை மேலெழும்பக் கூடும், சீற்றம் மற்றும் கடலரிப்பு ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்ற எச்சரிக்கை
கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நாகப்பட்டினம் (வடக்கு) மாவட்ட கடலோரப் பகுதிகளுக்கு கடல் சீற்ற எச்சரிக்கையை பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய கடல்சார் தேசிய மையம் (INCOIS) விடுத்துள்ளது.
டெல்டா மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைவு
கன மழை எச்சரிக்கையை அடுத்து, எண்டிஆர்எஃப் எனப்படும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 5 டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 210 பேர் கொண்ட 7 குழுக்கள் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு விரைந்து உள்ளன.
இதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 மணி நேரமும் சென்னையில் உள்ள ஆவின் பாலகங்கள் இயங்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
இதற்கிடையே புயலை எதிர்கொள்வது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

