(Source: ECI/ABP News/ABP Majha)
Agnipath : கார்கில் போரில் உருவான கனவு!: அக்னிபத் திட்டம் குறித்து மனம்திறந்த ராணுவ விவகாரத்துறை கூடுதல் செயலர்
அக்னிபத் திட்டம் இன்று முளைத்த யோசனை அல்ல பாகிஸ்தானுடனான 1999 கார்கில் போருக்குப் பிறகு அதன் தேவை உணரப்பட்டது.
அக்னிபத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் பின்னணியில் உள்ள காரணத்தை அண்மையில் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் ராணுவ விவகாரத் துறை கூடுதல் செயலர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி. கடந்த செவ்வாய்கிழமை அன்று அவர் அளித்த பேட்டியில் அக்னிபாத் திட்டம் இன்று முளைத்த யோசனை அல்ல என்றும் பாகிஸ்தானுடனான 1999 கார்கில் போருக்குப் பிறகு அதன் தேவை உணரப்பட்டது என்றும், நாட்டின் எதிர்காலம் இளைஞர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். ”அப்போது கார்கில் போர் கமிட்டி, எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதில் நமது நாட்டில் உள்ள ராணுவம் மிக முக்கியப் பங்காற்றுகிறது என்று கூறியது,” என்று லெப்டினன்ட் ஜெனரல் பூரி நமது செய்தி நிறுவனத்துடனான ஒரு பிரத்யேக உரையாடலில் கூறியுள்ளார்.
"இன்று இந்த திட்டத்தின்படியான சராசரி வயது வரம்பு 32 ஆண்டுகள், ஆனால் அந்த வயதை 26 வயதாகக் குறைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்தத் திட்டத்தைக் கொண்டு வருவதற்குப் பின்னால் உள்ள ஒரே நோக்கம், மேலும் அதிகமான ஜவான்கள் இதன் கீழ் வருவதை உறுதி செய்வதுதான். 2030ஆம் ஆண்டுக்குள் நமது நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பார்கள். எதிர்காலத்தில் இவ்வளவு பெரிய மக்கள்தொகை எண்ணிக்கையின் பிரதிபலிப்பாக நமது இந்திய ராணுவம் இருக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
லெப்டினன்ட் ஜெனரல் பூரி கூறுகையில், "இராணுவத்தை இளைஞர்களைக் கொண்டு உருவாக்குவதற்காக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது" என்றார்.
"இரண்டாவதாக, நமக்கு முந்தைய தலைமுறை தொழில்நுட்பத்துடன் அவ்வளவு பழகவில்லை, அதே நேரத்தில் அடுத்த தலைமுறை நம்மை விட மிகவும் முன்னால் இருப்பார்கள். தொழில்நுட்பத்தைப் பற்றிய அவர்களின் புரிதலிலிருந்து நாம் பயனடையலாம். இந்தப் புரிதலைப் பயன்படுத்தி நாட்டைப் பாதுகாக்க முடியும். இந்த திட்டத்தின் பின்னணியில் ஒரு தனி நபர் மட்டும் இல்லை, ஆனால் இதுவே அரசாங்கத்தின் அணுகுமுறை. இந்தத் திட்டத்தின் பணிகள் ஒரே நாளில் செய்யப்படவில்லை, ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இது கவனமாக திட்டமிடப்பட்டது, ”என்று அவர் மேலும் கூறினார்.
அக்னிபத் திட்டம் எவ்வாறு பயனளிக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த லெப்டினன்ட் ஜெனரல் பூரி, “17 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களை இந்தத் திட்டத்தின் கீழ் வேலைக்கு அமர்த்த விரும்பினோம், ஆனால் மக்களின் சமீபத்திய தேவையைக் கருத்தில் கொண்டு வயது அதிகரிக்கப்பட்டது. அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேரும் இளைஞர்களில் 25 சதவீதம் பேர் தொடர்ந்து நாட்டிற்கு சேவை செய்வார்கள், மீதமுள்ள 75 சதவீதம் பேர் அவர்கள் வெளியேறும் முன் திறன்களைக் கற்றுக்கொள்வார்கள். ராணுவப் பயிற்சியானது இளைஞர்கள் முன்னேறுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்” என்றார்.
நான்கு வருட சேவையை முடித்த இளைஞர்கள் என்ன செய்வார்கள் என்று கேட்டதற்கு, லெப்டினன்ட் ஜெனரல் பூரி, இந்த வாய்ப்பு இளைஞர்களை மிகவும் ஒழுக்கமானவர்களாக மாற்றும், இதனால் அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த வாழ்க்கையை வாழ முடியும் என்றார்.
"10 ஆம் வகுப்பு முடித்த பிறகு வரும் இளைஞர்களுக்கு 12 ஆம் வகுப்பு சான்றிதழ் வழங்கப்படும். மறுபுறம், இளைஞர்கள் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பார்கள், இது அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாகவும் நம்பிக்கையுடனும் மாற்றும்," என்றார் அவர்.