National Doctors Day 2021: தேசிய மருத்துவர்கள் தினம்: வரலாறு என்ன? ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?
1961 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை இந்திய அரசு வழங்கியது.1991-ஆம் ஆண்டில் இருந்து மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது
மருத்துவ தினமான இன்று, கொரோனா பெருந்தொற்று காலத்தில் 24 மணி நேரமும் அயராது உழைக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகிறது.
மருத்துவத் தினம் வராலாறு: தேசத்தின் புகழ்பெற்ற மருத்துவராகவும், மேற்கு வங்கத்தின் இரண்டாம் முதலமைச்சராகவும் விளங்கிய டாக்டர். பிதன் சந்திர ராய் (பி.சி.ராய்) நினைவைப் போற்றும் விதமாக அவருடைய பிறந்த மற்றும் இறந்த தினமான ஜூலை 1ம் தேதி தேசிய மருத்துவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
1961 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை இந்திய அரசு வழங்கியது. இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் 1991-ஆம் ஆண்டில் இருந்து இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது
முக்கியத்துவம் பெறும் மருத்துவர்கள்: நமது சமூகத்தில் சினிமா நட்சத்திரங்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் அதிகப்படியான முக்கியத்துவமும், அங்கீகாரமும் அளிக்கப்படுக்கிறது. பெருந்தொற்று காலத்திற்கு முன்புவரை, விளிம்பு நிலை மக்கள் நலத்திற்காக மருத்துவர்கள் ஆற்றும் பங்கு பெரியளவில் பேசப்படவில்லை.
இன்றைய தாராளமய பொருளாதார கொள்கை, மக்களை விட லாபத்தை மையப்புள்ளியாக வைத்து சுழன்று வருகிறது. இத்தகைய சமூக கட்டமைப்பில், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், முன்களப்பணியாளர்கள், அரசு ஊழியர்கள் போன்றோர்கள் முக்கியத்துவம் இழக்கத் தொடங்கினர். ஆனால், தற்போது அத்தியவாசியப் பணியாளர்கள் சமூகத்தின் மையப் பகுதிக்கு வரத்தொடங்கியுள்ளனர்.
உதாரணமாக, கடந்தாண்டு ஸ்பெயின் நாட்டின் முன்னாள் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கால்பந்து விளையாட்டு வீரர் ஒருவருக்கு 1 மில்லியன் யூரோவையும், உயிரியல் ஆராய்ச்சியாளர் ஒருவருக்கும் 1,800 யூரோவையும் மாதஊதியமாக கொடுத்து வருகிறீர்கள். இப்போது கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு தடுப்பு மருந்தை எதிர்பார்த்துள்ளீர்கள். நீங்கள் ஏன்? கிறிஸ்டியானோ ரொனால்டோ (அ) லியோனல் ஆண்ட்ரே மெஸ்ஸியிடம் தடுப்பு மருந்தை கேட்கக் கூடாது" என்று தெரிவித்தார்.
இது, தனிநபரின் கருத்து என்று எதேச்சையாக கடந்து விட முடியாது. கொரோனா பெருந்தொற்று என்பதே ஒரு முதலாளித்துவக் கொள்கையின் எதிர்வினையாக உருவானது என்பதை மறந்துவிட முடியாது. சீனாவின் வூஹான் இறைச்சிச் சந்தையில் உயிர் விலங்குகளை விற்கும் கடை ஒன்றிலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. லாப நோக்கத்தை முன்னிலைப்படுத்தும் பொருளாதாரக் கொள்கைகளினால், எண்ணற்ற உயிரினங்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்து வருகின்றன. இதன் காரணமாக, புவி வெப்பமடைதல் முதல் எபோலா நோய் போன்ற எண்ணற்ற இன்னல்களையும், நோய்களையும் மனித சமூகம் சந்தித்து வருகிறது.
தற்போதைய பெருந்தொற்று பொருளாதார சந்தையின் அடிப்படை நோக்கத்தை கேள்வி கேட்பதாய் அமைந்துள்ளது. என்னதான், தளர்வுகள் அறிவிக்கப்ப்படு மனித சமூகம் இயல்பு நிலைக்கு திரும்ப முற்பட்டாலும், முதலாளித்துவ சிந்தனையைத் தாண்டி நாட்டின் மருத்துவக் கட்டமைப்பையும், மருத்துவர்களின் பங்களிப்பையும் பேசுவதற்கான புதிய சொல்லாடல் தேவை என்பதே இன்றைய மருத்துவர் தினம் நமக்கு தரும் செய்தியாக அமைகிறது.