ஆழ்துளைக் கிணற்றால் விபரீதம்.. பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட குழந்தை!
பிகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள குல் கிராமத்தில் நேற்று 3 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆழ்துளை கிணற்றால் தொடரும் விபரீதம்:
ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆழ்துளை கிணற்றை தோண்டுவதற்கு என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இம்மாதிரியான சம்பவங்கள் நின்றபாடில்லை.
அதன் தொடர்ச்சியாக, பிகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள குல் கிராமத்தில் நேற்று 3 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, உள்ளூர் நிர்வாகம் தொடர் நடவடிக்கையை எடுத்தது.
திக் திக் நிமிடங்கள்:
8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, குழந்தை மீட்கப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையின் பெயர் சிவம் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிடைக்கப்பெற்ற தகவலின்படி, விவசாயி ஒருவர்தான் ஆழ்துளை கிணற்றை அமைத்துள்ளார். ஆனால், அது மூடப்படாததால் இந்த சம்பவம் நடந்துள்ளது.
நடந்தது என்ன?
தாய் ரேணு தேவி, காலை 9 மணியளவில் நாலந்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குல்பதேபூர் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணைக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது, தன்னுடன் குழந்தையையும் ரேணு அழைத்து சென்றுள்ளார். வயலில் பனை ஓலைகளுக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணறு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, குழந்தை அதில் தவறி விழுந்தது.
குழந்தையின் தாய், வீட்டிற்கு ஓடி வந்து தனது கணவர் டோமன் மஞ்சியிடம் நடந்த விபரீதத்தை தெரிவித்தார். பின்னர் குடும்பத்தினரும் மற்ற கிராம மக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். யாரோ உள்ளூர் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். காலை 11 மணியளவில் மீட்பு பணி தொடங்கியது.
இதையடுத்து, குழந்தை மீட்கப்பட்டது. மீட்பு பணிக்கு நாலந்தா நகர் பஞ்சாயத்து துணை தலைவர் நளின் மவுரியா உதவினார். இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் பேசுகையில், "இந்த ஆழ்துளை கிணறு, விவசாயிகளால் துளையிடுவதற்காக அமைக்கப்பட்டது. ஆனால், தண்ணீர் கிடைக்கவில்லை. அதனால் அவர்கள் வேறு இடத்தில் துளையிட ஆரம்பித்தனர். இருந்தபோதிலும், இந்த ஆழ்துளை கிணறு மூடப்படவில்லை" என்றார்.
சீராக உள்ள உடல்நிலை
ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை சுயநினைவுடன் உள்ளது. ஆம்புலன்ஸ் மூலம் பாவாபுரியில் உள்ள பகவான் மகாவீர் மருத்துவ அறிவியல் கழகத்திற்கு குழந்தை எடுத்து செல்லப்பட்டது. அங்கு குழந்தைக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளுடன் மருத்துவர்கள் குழு செய்தது. அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக, 18 அங்குல விட்டம் கொண்ட துளையின் அடிப்பகுதிக்கு கீழே சிக்கி கொள்ளாமல், சிறுவன் சுமார் 50 அடி ஆழத்திலேயே சிக்கியுள்ளான். இதனால், அவனை காப்பாற்றுவது ஒப்பீட்டளவில் எளிதாக இருந்தது. ஒரு குழாய் உதவியுடன் குழந்தைக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. குடிநீரும் அதன் வழியாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.