Nagaland 1st Woman MLA: 60 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் எம்எல்ஏ...சாதனை படைத்த நாகாலாந்து..!
மாநில அந்தஸ்து பெற்று 60 ஆண்டுகள் ஆன பிறகும், இன்று வரை நாகாலாந்தில் ஒரு பெண் சட்டப்பேரவை உறுப்பினர் கூட வெற்றிபெற்றதில்லை.
![Nagaland 1st Woman MLA: 60 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் எம்எல்ஏ...சாதனை படைத்த நாகாலாந்து..! Nagaland Assembly Election Results 2023 Will Nagaland script history and elect its 1st women MLA this year since 1963 Nagaland 1st Woman MLA: 60 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் எம்எல்ஏ...சாதனை படைத்த நாகாலாந்து..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/02/d5739e5cc1d826c855559f25db0daa381677735402786224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வடக்கிழக்கில் அமைந்துள்ள எட்டு மாநிலங்களில் ஒன்று நாகாலாந்து. கடந்த 1963ஆம் ஆண்டு, டிசம்பர் 1ஆம் தேதி, இந்தியாவின் 16ஆவது மாநிலமாக நாகாலாந்து பிரிக்கப்பட்டது.
நாகாலாந்து வரலாறு:
கிழக்கில் மியான்மர், வடக்கில் அருணாச்சல பிரதேசம் மேற்கில் அஸ்ஸாம், தெற்கில் மணிப்பூர் ஆகிய இடங்கள் அமைந்துள்ளன. 16 மாவட்டங்களை உள்ளடக்கிய நாகாலாந்தில் பல தரப்பட்ட பழங்கடியினர் அதிகம் வசிக்கினர்.
மாநில அந்தஸ்து பெற்று 60 ஆண்டுகள் ஆன பிறகும், இன்று வரை அங்கு ஒரு பெண் சட்டப்பேரவை உறுப்பினர் கூட வெற்றிபெற்றதில்லை. ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் இருக்கின்றபோதிலும், இதுவரை ஒரு பெண் சட்டப்பேரவை உறுப்பினர் கூட தேர்வு செய்யப்படாமல் இருப்பது பெரும் பிரச்னையாக உள்ளது.
ஒரு பெண் எம்எல்ஏ கூட பெறாத நாகாலாந்து:
நாகாலாந்தில் 6.52 லட்சம் ஆண் வாக்காளர்களும் 6.55 லட்சம் பெண் வாக்காளர்களும் உள்ளனர். இந்த முறை வரலாறு படைக்கும் வகையில், தேர்தலில் நான்கு பெண்கள் போட்டியிட்டுள்ளனர். இந்த முறை மொத்தம் 183 வேட்பாளர்கள் நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலில் களத்தில் உள்ளனர்.
அதில், ஹக்கானி ஜக்லு என்ற பெண் வேட்பாளர் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் திமாபூர்-III தொகுதியிலும் டெனிங் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக ரோசி தாம்சன் போட்டியிட்டுள்ளனர். பாஜக சார்பாக காஹுலி செம அடோயிசு தொகுதியில் போட்டியிடுகிறார். மேற்கு அங்கமி தொகுதியில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் சல்ஹூதுஓனுவோ களத்தில் உள்ளார்.
பாலின வேறுபாடு களையப்படுமா?
இதில், திமாபூர்-III தொகுதியில் ஹக்கானி ஜக்லு வெற்றி பெற்றுள்ளார். மேற்கு அங்கமி தொகுதியில் சல்ஹூதுஓனுவோவும் முன்னிலை பெற்று வருகிறார். டெனிங் தொகுதி நிலவரம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. அடோயிசு தொகுதியில் காஹுலி செம பின்னடைவை சந்தித்துள்ளார்.
நாகாலாந்தில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி - பாஜக கூட்டணி 41 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
மேகாலயா மற்றும் நாகலாந்து சட்டமன்றங்களில் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், இருமாநிலங்களுக்கும் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல் திரிபுரா மாநிலத்திலும் ஒரே கட்டமாக 60 தொகுதிகளுக்கு கடந்த 16ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியை சேர்ந்த நெய்பியு ரியோ ஒன்பதாவது முதலமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.
ஏற்கனவே, நாகாலாந்தில் பாஜக மற்றும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சி தான் நடைபெறுகிறது. அதே போல் இந்த முறையும் இரண்டு கட்சிகளும் இணைந்து தேர்தல் களத்தை சந்தித்தனர். காங்கிரஸ் கட்சி தனித்து களம் கண்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)