Mumbai: "சுயமரியாதையை விடமுடியாது" - வழக்கு விசாரையின்போது நீதிமன்றத்திலேயே ராஜினாமா செய்த நீதிபதி!
“நீதிமன்றத்தில் ஆஜரான உங்கள் ஒவ்வொருவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக உங்களை திட்டி இருப்பேன்," என்றார்.
மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் நீதிபதி ரோஹித் தியோ, 'என் சுயமரியாதைக்கு எதிராக என்னால் செயல்பட முடியாது' என்று கூறி நீதிமன்ற வளாகத்திலேயே ராஜினாமா செய்தார். நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்த இந்த சம்பவத்தில், திறந்த நீதிமன்றத்தில் ராஜினாமா செய்த ரோஹித் தியோ, டிசம்பர் 4, 2025 அன்று ஓய்வு பெறவிருந்தது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ரோஹித் தியோ?
2017 ஜூன் மாதம் மகாராஷ்டிராவின் அட்வகேட் ஜெனரலாக இருந்தபோது நீதிபதி ரோஹித் தியோ கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் ஏப்ரல் 2019 இல் நிரந்தர நீதிபதியாக உயர்த்தப்பட்டார். உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய போது, நீதிபதி டியோ பல முக்கிய தீர்ப்புகளை வழிநடத்தியுள்ளார். இந்த நிலையில், நீதிமன்ற அறையில் தனது ராஜினாமாவை அறிவித்த நீதிபதி டியோ, வக்கீல்களை தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதோடு, சில சமயங்களில் அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பும் கேட்டார்.
(Image: Wikimedia Commons)
மன்னிப்பு கேட்ட தியோ
“நீதிமன்றத்தில் ஆஜரான உங்கள் ஒவ்வொருவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக உங்களை திட்டி இருப்பேன். உங்களில் யாரையும் புண்படுத்த வேண்டும் என்று நான் விரும்பவில்லை, ஏனென்றால் நீங்கள் அனைவரும் எனக்கு ஒரு குடும்பம் போன்றவர்கள். நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்பதை உங்களிடம் தெரிவிப்பதில் வருத்தம் தான். ஆனால், எனது சுயமரியாதைக்கு எதிராக என்னால் செயல்பட முடியாது,'' என்றார். “எனது ராஜினாமா கடிதம் நாட்டின் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. தனிப்பட்ட காரணங்களுக்காக நான் ராஜினாமா செய்கிறேன், ”என்று அவர் மேலும் கூறினார்.
அரசின் தீர்மானத்தை நிறுத்தி வைத்த தியோ
ராஜினாமா அறிவிப்புக்குப் பிறகு, அன்றைய தினம் நீதிபதி தியோவின் முன், பட்டியலிடப்பட்ட அனைத்து விவகாரங்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. மஹாராஷ்டிராவில், சிறு கனிமங்களை சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சம்ருத்தி மஹாமார்க்கில் பணிபுரியும் ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அந்த தண்டனைகளை ரத்து செய்த மகாராஷ்டிர அரசின் தீர்மானத்தின் செயல்பாட்டை கடந்த ஜூலை 26 அன்று, நீதிபதி தியோ நிறுத்தி வைத்தார்.
(Image: Bar and Bench)
சாய்பாபா விடுவிப்பு சர்ச்சை
அக்டோபர் 14, 2022 அன்று, மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் வழக்கில் டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவை விடுவித்தார். சாய்பாபாவை குற்றவாளி என்று தீர்ப்பளித்த செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவு "செல்லுபடியாகாது" என்று கூறினார். இருப்பினும், உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 19, 2023 அன்று அவர் வழங்கிய விடுதலையை நிறுத்தி, நான்கு மாதங்களுக்குள் தகுதியின் அடிப்படையில் புதிய பரிசீலனைக்காக உயர் நீதிமன்றத்திற்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது.