Mulayam Singh Yadav : வடக்கில் மறைந்த சூரியன்.! யார் இந்த முலாயம்சிங் யாதவ்...?
இந்தியாவின் மூத்த அரசியல்வாதி முலாயம்சிங் யாதவ் மறைவால் சமாஜ்வாதி தொண்டர்களும், அவரது ஆதரவாளர்களும் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
இந்தியாவின் மூத்த அரசியல்வாதியும், உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான முலாயம்சிங் யாதவ் இன்று காலமானார். அவரது மறைவால் உத்தரபிரதேச மக்களும், சமாஜ்வாதி நிர்வாகிகளும், தொண்டர்களும் கவலை அடைந்துள்ளனர்.
அரசியல் அறிவியல் படிப்பு :
உத்தரபிரதேசத்தில் உள்ள எடவா மாவட்டத்தில் உள்ள சைஃபை கிராமத்தில் சுகர்சிங்-முர்த்திதேவிக்கு 1939ம் ஆண்டு நவம்பர் 22-ந் தேதி பிறந்தவர். முலாயம் சிங் யாதவ் எடவா மாவட்டத்தில் உள்ள கர்ம் ஷேத்ரா கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். சிகோகபாத்தில் பி.டி. பட்டம் பெற்றார். ஆக்ரா பல்கலைகழகத்திற்குட்பட்ட பி.ஆர். கல்லூரியில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார்.
முலாயம்சிங் யாதவிற்கு பள்ளி காலங்களில் இருந்தே அரசியலில் ஆர்வம் இருந்து வந்துள்ளது. மாபெரும் தலைவர்களான ராம்மனோகர் லோஹியா மற்றும் ராஜ் நரேன் ஆகியோரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவர்கள் வழியில் அரசியலில் நுழைந்தார். பின்னர், 1967ம் ஆண்டு முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு சென்றார். அப்போது, நிச்சயம் உத்தரபிரதேச மக்கள் தங்களுக்கான மாபெரும் தலைவன் முதன்முறையாக சட்டமன்றம் செல்கிறார் என்று அறிந்திருக்க மாட்டார்கள்.
எமர்ஜென்சிக்கு எதிர்ப்பு :
பின்னர், நாட்டில் எமர்ஜென்சி பிறப்பிக்கப்பட்ட தருணத்தில் ஜனநாயகத்திற்காக குரல் கொடுத்தார் முலாயம்சிங் யாதவ். 1975ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி பிறப்பித்த அவசர பிரகடன நிலைக்கு எதிரான நிலைபாடு கொண்ட முலாயம்சிங் யாதவ் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறை வைக்கப்பட்டார். முலாயம்சிங் யாதவின் கொள்ளை பிடிபாடும், அவரது சேவையும் மக்கள் மத்தியில் அவருக்கென்று மாபெரும் செல்வாக்கை உயர்த்தியது.
அந்த செல்வாக்கின் காரணமாக 1977ம் ஆண்டு உத்தரபிரதேசத்திற்கு முதன்முறையாக அமைச்சர் ஆனார். தனது அயராத உழைப்பினாலும் கட்சியிலும், மக்கள் மத்தியிலும் செல்வாக்கை அதிகரித்துக்கொண்ட முலாயம்சிங் யாதவ் 1980ம் ஆண்டு லோக் தளம் கட்சியின் தலைவராக தேர்வானார். உத்தரபிரதேச சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக 1982ம் ஆண்டு முதல் 1985ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தார்.
50 வயதில் முதல்வர் :
உத்தரபிரதேசத்தில் 1989ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனதா தளம் சார்பாக முதன்முறையாக உத்தரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக முலாயம்சிங் யாதவ் பதவியேற்றார். 50 வயதில் முதன்முறை முதலமைச்சரான முலாயம்சிங் யாதவ் முதன்முறையாக சம்யுக்தா சோசியலிஸ்ட் கட்சிக்காக எம்.எல்.ஏ.வாக தேர்வானார். இரண்டாவது முறையாக 1974ம் ஆண்டு பாரதிய கிரந்தி தளம் கட்சிக்காக எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்கு தேர்வானார்.
எமர்ஜென்சி காலத்திற்கு பிறகு உத்தரபிரதேசத்தில் ஏழு கட்சிகளின் இணைப்பால் உருவான பாரதிய லோக் தளம் சார்பாக மூன்றாவது முறையாக 1977ம் ஆண்டு சட்டசபைக்கு தேர்வானார். 4வது முறையாக 1985ம் ஆண்டு சரண்சிங்கின் லோக்தளம் சார்பாக 1985ம் ஆண்டு சட்டசபைக்கு தேர்வானார்.
சமாஜ்வாதி உதயம் :
லோக்தளம், ஜகஜீவன் காங்கிரஸ், ஜன மோர்ச்சா ஆகிய கட்சிகளின் இணைப்பால் ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்தநாளில் உருவான ஜனதா தளம் கட்சியின் சார்பில் அமைந்த ஆட்சியில் முதன்முறையாக 1989ம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பு வகித்தார். உத்தரபிரதேசத்தில் மாறி, மாறி நிகழ்ந்து வந்த அரசியல் கட்சி இணைப்புகள் மற்றும் அரசியல் நிகழ்வுகளால் 1992ம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியை முலாயம்சிங் யாதவ் தொடங்கினார்.
கட்சி தொடங்கி ஒரே ஆண்டில், அதாவது 1993ம் ஆண்டு முலாயம்சிங் யாதவ் இரண்டாவது முறையாக உத்தரபிரதேச முதலமைச்சராக பதவியேற்றார். 1996ம் ஆண்டு மைன்பூரி மக்களவைத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக நாடாளுமன்றம் சென்றார். 1998ம் ஆண்டு இரண்டாவது முறையாக எம்.பி.யாக நாடாளுமன்றத்திற்கு தேர்வானார். பின்னர், 1999ம் ஆண்டு இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றார். 1999ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சம்பல் மற்றும் கன்னவ்ஜ் தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளார்.
உத்தரபிரதேசத்தின் கருணாநிதி :
2003ம் ஆண்டு உத்தரபிரதேச முதலமைச்சராக மூன்றாவது முறையாக தேர்வானார். 2004ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் குன்னாரர் தொகுதியில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 899 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். 2014ம் ஆண்டு அலம்கர் மற்றும் மைன்பூரி என 2 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் பிரேம்சிங் சக்யாவை 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றார்.
தமிழ்நாட்டில் கருணாநிதி போல, உத்தரபிரதேசத்தின் கருணாநிதியாக உலா வந்த முலாயம்சிங் யாதவ் வட இந்திய அரசியலிலும் தவிர்க்க முடியாத தலைவராக வலம் வந்தவர். அவரது மறைவால் சமாஜ்வாதி தொண்டர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.