Mukesh Ambani: 'முகேஷ் அம்பானியை சுட்டுக் கொல்வோம்' மின்னஞ்சலில் வந்த கொலை மிரட்டலால் பரபரப்பு
ரூ. 20 கோடி தரவில்லை என்றால் முகேஷ் அம்பானியை சுட்டுக் கொலை செய்து விடுவோம் என கூறி நேற்று இரவு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ. 20 கோடி கேட்டு முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சல் மூலம் சதாப் கான் என பெயரிட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
Reliance Industries Chairman Mukesh Ambani received death threat on email on 27th October, threatening to shoot him if he failed to pay Rs 20 crores. Case registered under sections 387 and 506 (2) IPC in Gamdevi PS of Mumbai: Police
— ANI (@ANI) October 28, 2023
பணம்பெரும் கோடீஸ்வரர்:
ரிலையன்ஸ் நிறுவனத்தின் சேர்மேனாக இருப்பவர் தான் முகேஷ் அம்பானி. அவர் உலக பணக்காரர்களின் பட்டியலில் முன்னிலை வகித்து வருகிறார். அவருக்கு நேற்று, (வெள்ளிக்கிழமை 27 ஆம் தேதி) மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த மின்னஞசலில் ரூ. 20 கோடி கொடுக்காவிட்டால் அவரை சுட்டுக்கொலை செய்து விடுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை காவல் துறையினர் உறுதி செய்துள்ளனர்.
தொடர் மிரட்டல்கள்:
இது தொடர்பாக மும்பையின் காம்தேவி காவல் நிலையத்தில் ஐ.பி.சி 387 மற்றும் 506 (2) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தும் மருத்துவமனைக்கு முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை இந்த மாத தொடக்கத்தில் கொலை செய்யப்போவதாக மிரட்டல் வந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது. பின்னர், மருத்துவமனையை வெடி வைத்து தகர்த்து முகேஷ் அம்பானி, அவரது மனைவி நிதா அம்பானி மற்றும் மகன்கள் ஆகாஷ் அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோரைக் கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்ததாக பீகாரில் உள்ள தர்பங்காவைச் சேர்ந்த ராகேஷ் குமார் மிஸ்ரா (வயது 30) என்பவரை மும்பை போலீஸார் கைது செய்ததாக ஆங்கில நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
மும்பை, ஆண்டிலியாவில் உள்ள அம்பானி குடும்பத்தினரின் வீட்டை வெடி வைத்து தகர்க்கப் போவதாகவும் அந்த நபர் மிரட்டியுள்ளார். ரிலையன்ஸின் நிர்வாக இயக்குனரான முகேஷ் அம்பானியின் நிர்வாக உதவியாளர், பாதுகாப்புத் தலைமையிடம் தங்களுக்கு நேற்று இரவு 8.51 மணிக்கு மின்னஞ்சல் வந்ததாக கூறப்பட்டுள்ளது. அந்த மின்னஞ்சலை அனுப்பியவர் ஷதாப் கான் என்று அவர் தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த மின்னஞ்சல் தொடர்பாக மும்பை காம்தேவி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ஜெலட்டின் குச்சிகள்:
முகேஷ் அம்பானி அல்லது அம்பானி குழுமத்திற்கு கொலை மிரட்டல் வருவது ஒன்றும் புதிதல்ல. நவம்பர் 2021 இல், ஒரு டாக்சி டிரைவர் ஆன்டிலியாவுக்கு (மும்பையில் இருக்கும் அம்பானி வீடு)அச்சுறுத்தல் இருப்பதாக துப்பு கொடுத்தார், அதைத் தொடர்ந்து அம்பானி வீட்டிற்கு வெளியே மும்பை காவல்துறையால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இருப்பினும், விசாரணையில் அத்தகைய அச்சுறுத்தல் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
பிப்ரவரி 25, 2021 அன்று, ஆண்டிலியாவுக்கு அருகிலுள்ள தெற்கு மும்பையில் இருக்கும் கார்மைக்கேல் சாலையில் வெடிபொருள் நிரப்பப்பட்ட கார் ஒன்று நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம், விசாரணை அமைப்புகளையும், மாநில அரசையும் உலுக்கியது. ஜெலட்டின் குச்சிகளுடன் அச்சிடப்பட்ட அச்சுறுத்தல் குறிப்பையும் காவல் துறையினர் மீட்டனர். அதில் இது ஒரு "டிரெய்லர்" மட்டுமே என்றும், அடுத்த முறை வெறும் குச்சிகளுக்கு பதிலாக வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.