’மோடி இதுபோல் இன்னும் பல பாலங்களை திறந்து வைக்க உள்ளார்...’ - மல்லிகார்ஜூன கார்கே தாக்கு
”மோர்பியில் விழுந்தது போல் பல பாலங்களை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதால் குஜராத் தேர்தல் தாமதமாகிறது” - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
குஜராத் மாநிலம், மோர்பி தொங்கு பால விபத்து குறித்து தற்போதைய உயர் நீதிமன்ற அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குறிப்பிட்ட காலவரையறைக்குள் விரைந்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
முன்னதாக ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணமான பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்துகொண்டார். அப்போது ”மோர்பியில் விழுந்தது போல் பல பாலங்களை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதால் குஜராத் தேர்தல் தாமதமாகிறது” என காட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முன்னதாக இது குறித்து ட்வீட் செய்துள்ள மல்லிகார்ஜூன கார்கே, “மோர்பி தொங்கு பால விபத்தில் உயிரிழந்த 135 உயிர்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட நகராட்சி, தனியார் நிறுவன அலுவலர்கள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.
Accountability must be set for the loss of 135 lives in the #MorbiBridgeCollapse. The conduct of municipality, Pvt. firm and officials must be thoroughly investigated.
— Mallikarjun Kharge (@kharge) November 1, 2022
A time-bound judicial enquiry led by a sitting SC/HC Judge is the only recourse. pic.twitter.com/CHBKkGJzTY
தற்போது பதவி வகிக்கும் உயர் நீதிமன்ற அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குறிப்பிட்ட காலவரையறைக்குள் விரைந்து நீதி விசாரணை நடத்துவதே ஒரே வழி" என ட்வீட் செய்துள்ளார்.
அக்டோபர் 30ஆம் தேதி மாலை 6.42 மணிக்கு மோர்பி பாலத்தின் மீது 500 பேர் குவிந்திருந்த நிலையில் பாலம் விபத்துக்குள்ளானது. சத் பூஜைக்காக மக்கள் கூட்டம் பாலத்தில் குவிந்திருந்த போது எதிர்பாராமல் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
View this post on Instagram
மோர்பி பால விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகை வழங்க முன்னதாக குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த போது பாலத்தில் மக்கள் பலர் தொங்கிக் கொண்டிருந்த வீடியோவும், ஆற்றில் விழுந்து தத்தளித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. இதுவரை 135 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். 400 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.