ஆஹா! சாலை வசதி இல்லாத கிராமங்களில் புதிய சாலைகள்.. வருகிறது சூப்பர் திட்டம்!
பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஊரக வளர்ச்சித் துறையின் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஊரக வளர்ச்சித் துறையின் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2024-25 முதல் 2028-29 நிதியாண்டில் செயல்படுத்துவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சாலை வசதி இல்லாத, தகுதி வாய்ந்த 25,000 குடியிருப்புகளுக்கு புதிய இணைப்புச் சாலைகள் அமைக்கவும், புதிய இணைப்புச் சாலைகளில் பாலங்கள் கட்டுதல் / மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக 62,500 கி.மீ. நீளமுள்ள சாலைகள் அமைக்க நிதியுதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.70,125 கோடியாகும்.
திட்டத்தின் விவரங்கள்:
i. பிரதமரின் கிராம சாலைகள் திட்டம் -IV 2024-25 முதல் 2028-29 நிதியாண்டில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.70,125 கோடி (மத்திய அரசின் பங்கு ரூ.49,087.50 கோடி மற்றும் மாநில பங்கு ரூ.21,037.50 கோடி).
ii. இத்திட்டத்தின் கீழ், சமவெளிகளில் 500+ மக்கள்தொகை, வடகிழக்கு & மலைப்பகுதிகள்/யூனியன் பிரதேசங்கள், சிறப்புப் பிரிவுப் பகுதிகள் (பழங்குடியினர் அட்டவணை V, முன்னேற விரும்பும் மாவட்டங்கள்/தொகுதிகள், பாலைவனப் பகுதிகள்) மற்றும் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 100+ மக்கள் தொகை கொண்ட 25,000 இணைப்பில்லாத குடியிருப்புகள், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
iii. இத்திட்டத்தின் கீழ், சாலை வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு 62,500 கி.மீ தூரத்திற்கு அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்ற சாலைகள் அமைக்கப்படும். அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்ற சாலையின் சீரமைப்பில் தேவையான பாலங்கள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நன்மைகள்:
• சாலை வசதி இல்லாத 25,000 குடியிருப்புகளுக்கும் அனைத்து பருவ காலத்திற்கும் ஏற்ற சாலை வசதி ஏற்படுத்தப்படும்.
• அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்ற சாலைகள், தொலைதூர ஊரகப் பகுதிகளின் சமூக-பொருளாதார வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கு கிரியா ஊக்கிகளாக செயல்படும். குடியிருப்புகளை இணைக்கும் போது, உள்ளூர் மக்கள் பயன்பெறும் வகையில், அருகிலுள்ள அரசு கல்வி, சுகாதாரம், சந்தை, வளர்ச்சி மையங்கள், முடிந்தவரை அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்ற சாலையுடன் இணைக்கப்படும்.
• பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டம்-IV, சாலை கட்டுமானத்தின் கீழ், குளிர்பதன கலவை தொழில்நுட்பம் மற்றும் கழிவு பிளாஸ்டிக், சிமெண்ட் கான்கிரீட் பலகைகள், செல் நிரப்பப்பட்ட கான்கிரீட், முழு ஆழ மீட்பு, கட்டுமான கழிவுகள் மற்றும் எரிசாம்பல், எஃகு கசடு போன்ற பிற கழிவுகளை பயன்படுத்துதல் போன்ற சர்வதேச அளவுகோல்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை ஒருங்கிணைக்கும்.