PTR Meets KTR: டிப்ஸ் கொடுத்த கேடிஆர்... பக்கா ப்ளான் போட்ட பிடிஆர்...! ஐடியில் கெத்து காட்டப்போகும் முன்னெடுப்புகள்!
தெலுங்கானாவில் தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட கொள்கை மற்றும் முயற்சிகள தமிழ்நாட்டிலும் செயல்படுத்தப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (PTR) தலைமையில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு குழு, தெலுங்கானாவில் இருக்கும் தகவல் தொழில்நுட்பத் துறையில் செயல்படுத்தப்பட்ட கொள்கைகள் மற்றும் உத்திகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளனர். பி.டி.ஆர் தலைமையிலான குழுவினர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கே.டி. ராமராவை தெலுங்கானா மாநில செயலகத்தில் சந்தித்தனர். இந்த பயணத்தில், தெலுங்கானாவில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதுமை சுற்றுச்சூழல் அமைப்பை நேரடியாகப் புரிந்துகொள்வதற்கான பல்வேறு தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்-ஆளுமை முயற்சிகள் மற்றும் கொள்கைகளை தமிழ்நாடு பிரதிநிதிகள் ஆய்வு செய்வார்கள். அவர்கள் T-HUB, T-Works மற்றும் WE Hub ஆகியவற்றைப் பார்வையிடுவார்கள்.
இந்த சந்திப்பின் போது, தெலுங்கானாவில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு தகவல் தொழில்நுட்ப முன்முயற்சிகளை எடுத்துரைத்து விரிவான விளக்கத்தை கே.டி. ராமாராவ் வழங்கினார். தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்பக் கொள்கை, கிராமப்புற தொழில்நுட்ப மையக் கொள்கை, மின்னணுவியல் கொள்கை, கேமிங் & அனிமேஷன் கொள்கை, சைபர் பாதுகாப்புக் கொள்கை ஆகியவற்றை விளக்கினார். தெலுங்கானா அரசால் நிறுவப்பட்ட T-Hub, WE Hub, T-Woks, RICH மற்றும் TASK போன்ற பல்வேறு அமைப்புகளையும் அமைச்சர் கே.டி.ஆர் அறிமுகப்படுத்தினார்.
தெலுங்கானா உருவான பிறகு, ஐடி நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை ஹைதராபாத்தில் இருந்து மாற்றப்போவதாக தவறான தகவல் பரவிய போதிலும், வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளதாக கேடிஆர் குறிப்பிட்டார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கான விரிவான கொள்கையை உருவாக்குவதற்கான முயற்சிகள் பற்றிய விரிவான தகவல்களை அவர் வழங்கினார். இந்தக் கொள்கை தெலுங்கானா அரசாங்கத்தின் தொலைநோக்கு மற்றும் லட்சிய இலக்குகளை உள்ளடக்கியது மட்டுமல்லாமல், மாநில அரசாங்கத்தின் ஆதரவைப் புரிந்துகொள்ள தகவல் தொழில்நுட்பத் துறையில் பங்குதாரர்களின் உள்ளீட்டையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறது என்பதை கேடிஆர் சுட்டிக்காட்டினார்.
புதிய முதலீடுகளை ஈர்ப்பதே முதன்மையான குறிக்கோளுடன் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், தொடக்கத்தில் அமேசான் மிக சிறிய நிறுவனமாக தொடங்கியது என்றும் சுமார் 8 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளதாகவும், கூகுள், சர்வீஸ்நவ் மற்றும் ஃபேஸ்புக் போன்ற உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களும் தற்போது பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் கேடிஆர் தெரிவித்தார். தெலுங்கானாவின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், உயர் கல்வித் தகுதியுடைய நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுடன், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மூலம் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க மாநில அரசு தீவிரமாக முயற்சித்து வருவதாக தெரிவித்தார். இதன் விளைவாக, ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் சேவைகளில் மாநிலம் முன்னணியில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அரசின் முழு நிதியுதவியுடன் வாரங்கல், கம்மம், கரீம்நகர், மஹ்பூப்நகர் மற்றும் சித்திப்பேட்டை ஆகிய இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைக்க மாநில அரசு முன்முயற்சி எடுத்துள்ளதாக கேடிஆர் குறிப்பிட்டார். TASK மற்றும் T-Hub ஆகிய அலுவலகங்கள் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக நிறுவப்பட்டன என்றும் இந்த குறிப்பிட்ட முயற்சியானது ஐடி நிறுவனங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள நூற்றுக்கணக்கான இளைஞர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்ட முன்முயற்சிகள் மற்றும் கொள்கைகளை கேட்ட பிறகு, அம்மாநில அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பழனிவேல் தியாகராஜன் பாராட்டு தெரிவித்தார். சமீபத்தில் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பி.டி.ஆர், தெலுங்கானாவில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை தமிழ்நாட்டில் பிரதிபலிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஐதராபாத்தில் ஐடி துறையின் அபரிமிதமான வளர்ச்சியைப் பாராட்டிய அவர், தெலுங்கானா அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் உண்மையிலேயே உத்வேகம் அளிப்பதாக குறிப்பிட்டார். தமிழக பிரதிநிதிகளின் வருகைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ததற்காக தெலுங்கானா அரசு மற்றும் கேடிஆர் -க்கு பிடிஆர் தனது நன்றியை தெரிவித்தார். இக்குழுவினர் நாளை மறுநாள் தமிழகம் திரும்ப உள்ளனர்.