MHA Order Mock Drills: வரும் 7-ம் தேதி நாடு தழுவிய போர் பதற்ற ஒத்திகை.. மத்திய அரசு உத்தரவு என தகவல்...
வரும் 7-ம் தேதி நாடு தழுவிய போர் பதற்ற ஒத்திகையை நடத்த, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், வரும் 7-ம் தேதி நாடு தழுவிய போர் பதற்ற ஒத்திகை நடத்துமாறு மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல்
கடந்த மாதம் பஹல்காம் 22-ம் தேதி, காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில், சுற்றுலாப் பயணிகள் கேளிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு, தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெஸிஸ்டண்ட் ஃபிரன்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில், இந்தியா பல்வேறு வகைகளில் பாகிஸ்தானுக்கு பதிலடி வழங்குவதை தொடங்கியது. முதற்கட்டமாக, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது, இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தானியர்களை வெளியேற்றியது என பலவிதமான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது.
இதையடுத்து, பாகிஸ்தானும், சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்தது, இந்தியர்களை திருப்பி அனுப்புவது என பலவிதமான நடவடிக்கைகளை எடுத்தது. இதனிடையே, ஏற்கனவே பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக இந்தியா குற்றம்சாட்டி வந்த நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர், வேறு வழியில்லாமல் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருவதாக குறிப்பிட்டார்.
இந்நிலையில், இங்கு பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டங்கள் மற்றும் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது தாக்குதல் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. எந்த நேரமும் இந்தியா தாக்குதல் நடத்தலாம் என அந்நாட்டு அரசுக்கு, அவர்களது உளவுத்துறை எச்சரிக்கையும் விடுத்தது.
இப்படிப்பட்ட சூழலில், போர் பதற்ற ஒத்திகை நடத்துமாறு, மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு என்ன.?
உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள விரிவான கடிதத்தில், போர் பதற்ற சூழலில் அவசர கால வெளியேற்ற ஒத்திகைகள், மாணவர்கள், பொதுமக்களுக்கு, போர்க்கள சூழலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பயிற்சி அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான தாக்குதல் நடைபெறும்போது ஒலிக்கப்படும் அபாய ஒலி சைரன்களை ஒலிக்க விட்டு ஒத்திகை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதேபோல், எதிரிகளின் தாக்குதல் நடைபெறும் நேரத்தில், மின்வெட்டு அறிவிக்கப்பட்டால் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை ஒத்திகை மேற்கொள்ளவும், முக்கிய மின்னுற்பத்தி கேந்திரங்களை பாதுகாக்கும் ஒத்திவை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
மத்திய அரசின் இந்த உத்தரவால் இரு நாடுகளுக்குமிடையேயான போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்தியா தாக்குதல் நடத்தும் பட்சத்தில், பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதால், இந்த ஒத்திகை மேற்கொள்ளப்படுவதாக கருதப்படுகிறது. இதனால், 7-ம் தேதிக்குப் பிறகு, எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்படலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.
7-ம் தேதிக்குப்பிறகு என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்...





















