Bangalore Metro Land Row: 152 ஆண்டுகள் பழமையான தேவாலயம்... மெட்ரோ திட்டத்திற்கு எதிராக போராட்டம்!
பெங்களூரில் 152 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று தேவாலய உறுப்பினர்கள் மெட்ரோ திட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர்.
நாடு முழுவதும் பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகளும் மெட்ரோ ரயில் சேவைகளை பெருநகரங்களில் ஊக்குவித்து வருகிறது. தகவல் தொழில்நுட்ப நகரங்கள் அதிகளவில் நிறைந்துள்ள பெங்களூரிலும் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பெங்களூரில் உள்ள வெள்ளாரா மெட்ரோ ரயில் நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக அதன் அருகே உள்ள பழமையான தேவாலயம் ஒன்றிற்கு சொந்தமான நிலத்தை வழங்குமாறு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அவ்வாறு தேவாலய நிலத்தில் மெட்ரோ பணிகள் நடைபெற்றால் 152 ஆண்டுகள் பழமையான தேவாலயம் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், தேவாலயத்தின் பாதுகாப்பில் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் தேவாலயத்தின் பாதிரியார்கள், தேவாலய உறுப்பினர்கள், ஊழியர்கள், தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு வரும் பக்தர்கள் அஞ்சுகின்றனர்.
மேலும் படிக்க : கிறிஸ்தவ பெண்ணை மணந்த லாலு மகன்: அதிருப்தி தெரிவித்த தாய்மாமன்!
இதன்காரணமாக, அவர்கள் கடந்த மூன்று வாரங்களாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவாலயத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மெட்ரோ நிலையத்திற்கு நிலத்தை எடுத்துக்கொள்ளும் திட்டத்திற்கு எதிரான பதாகைகளுடன் தேவாலயத்திற்கு வரும் பக்தர்கள் உள்பட பலரும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அவர்கள் தேவாலயத்தின் உள்ளேயே திறந்த வெளியில் போராடினர். இந்த போராட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தி வரும் எபினேசர் பிரேம்குமார் கூறும்போது, பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் வெள்ளாரா மெட்ரோ ரயில் நிலைய காற்றோட்ட வசதிக்காக இந்த நிலத்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக நவம்பர் 4-ந் தேதி நோட்டீஸ் அனுப்பினர். இதனால், எங்களுக்கு 152 ஆண்டுகால தேவாலயத்தின் பாதுகாப்பு மீது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும், மெட்ரோ நிர்வாகம் பாதுகாப்பு காரணமாக தேவாலயத்திற்கு சொந்தமான 103 மீட்டர் நிலத்தை எடுத்துக்கொண்டு விட்டனர் என்றும் அவர் கூறினார்.
இந்த அமைப்பினர் மெட்ரோ பணிகள் காரணமாக மரங்களை வெட்டுவதற்கு எதிராக கடந்த 300 நாட்களாக பல்வேறு போராட்டங்களை அவ்வப்போது முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : 2001 நாடாளுமன்ற தாக்குதல் முறியடிப்பு தினம்… வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இரங்கல்!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்