Parliment Special Session: முடிந்தது சகாப்தம்.. தொடங்கியது புதிய அத்யாயம்.. புதிய நாடாளுமன்ற வளாகத்தில் கூட்டத்தொடர்..
சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று கூட்டுக் கூட்டம் முடிந்தபின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு சென்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று கூட்டுக் கூட்டம் நடைபெற்று முடிந்த பின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு சென்றனர்.
#WATCH | Members of Parliament move from the Old Parliament building to the New Parliament Building. pic.twitter.com/XV3yxhKHyq
— ANI (@ANI) September 19, 2023
பெரும் பொருட்செலவில் டெல்லியில் மத்திய அரசு புதிய நாடாளுமன்றத்தை கட்டியுள்ளது. அதன் திறப்பு விழாவில் தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக செங்கோல் வைக்கப்பட்டது. இந்நிலையில் தான், வழக்கத்திற்கு மாறாக 5 நாட்கள் நடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர் 18 முதல் 22ம் தேதி வரை நடைபெறும் என கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதில், முதல் நாள் கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்றத்தில் நடைபெறும் எனவும், அதற்கடுத்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் முழுவதும் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அப்போது, பேசிய பிரதமர் மோடி உள்ளிட்ட உறுப்பினர்கள் நாடாளுமன்றம் தொடர்பான தங்களது அனுபவங்கள் மற்றும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நாளின் முடிவில் பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு உறுப்பினர்கள் பிரியா விடை அளித்தனர். தொடர்ந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த பிரமாண்ட கட்டடம் அருங்காட்சியமாக மாற்றப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய நாடாளுமன்ற கட்டடத்திலிருந்து புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு செல்வதற்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் குழுவாக இன்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சுமார் 750 எம்.பிக்கள் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் தனித்தனியாகவும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடந்த கூட்டத் தொடரில், ” விநாயகர் சதுர்த்தி நாளான இன்று புதிய பயணத்தை தொடங்குகிறோம். நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் உறுதியேற்க வேண்டும். பழைய நாடாளுமன்றத்தில் தான் இந்தியா அரசியலமைப்பிற்கு வடிவம் கொடுக்கப்பட்டது. பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் தான் இந்தியக் கொடியும் தேசிய கீதமும் உருவானது. இரு அவைகளின் உறுப்பினர்களும் பல வரலாற்று முடிவுகளை எடுத்த இடம் இது. ஷாஹா பானோவின் முத்தலாக் வழக்கு, திருநங்கைகள் மசோதா மற்றும் 370வது பிரிவு உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த கட்டிடம் மற்றும் அதுவும் இந்த மைய மண்டபம் நம் உணர்ச்சிகளால் நிரம்பியுள்ளது. 1952 முதல், உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 41 நாடுகளின் தலைவர்கள் இந்த மத்திய மண்டபத்தில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றியுள்ளனர். நமது குடியரசுத் தலைவர்கள் சுமார் 86 முறை இங்கு உரையாற்றியுள்ளனர்” என கூறினார்.
மேலும், “பயங்கரவாதம், பிரிவினைவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியமானதாக இருந்த 370வது சட்டப்பிரிவு இந்த நாடாளுமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது நமது அதிர்ஷ்டம். இந்தியாவின் இளைஞர்கள் தொழில்நுட்பத் துறையில் வேகமாக முன்னேறி வருகிறார்கள், அது உலகளவில் பாராட்டப்படுகிறது. கடந்த 1000 ஆண்டுகளில் இந்தியா இன்று இருப்பது போல் சிறப்பாக இல்லை. இந்தியாவின் வங்கித் துறை தானே செழித்து வருகிறது” என குறிப்பிட்டு பேசியுள்ளார்.
#WATCH | Prime Minister Narendra Modi, Union Home Minister Amit Shah, Defence Minister Rajnath Singh, Union Ministers Piyush Goyal, Nitin Gadkari and other parliamentarians enter the New Parliament building. pic.twitter.com/kis6atj56K
— ANI (@ANI) September 19, 2023
அதனை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு சென்றனர். வந்தே மாதரம் என முழங்கியபடி அமைச்சர்கள் மற்றும் பாஜக எம்.பிக்களும் உள்ளே சென்றனர்.