இந்தியாவில் மருத்துவப் படிப்பு வியாபாரமாகிவிட்டது.. உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?
சூப்பர் ஸ்பெசாலிட்டி நீட் தேர்வு முறை மாற்றம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நடவடிக்கை போல் இருப்பதாகவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இந்தியாவில் தற்போது மருத்துவக் கல்வி முறை எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய பிரச்சனை வியாபாரமாக மாறியது தான் என உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்து உள்ளது.
சூப்பர் ஸ்பெசாலிட்டி முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முறையை கடைசி நேரத்தில் தேசிய தேர்வு வாரியம் மாற்றி அமைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 40 மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசூட் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்வுக்கு சில நாட்களே உள்ள நிலையில் சூப்பர் ஸ்பெசாலிட்டி முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முறையை மாற்றியதற்காக மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு வாரியத்துக்கு கண்டனம் தெரிவித்தது. கடைசி நேரத்தில் இதுபோன்ற தேர்வு முறையை மாற்றுவது மாணவர்களை பாதிக்கும் என்றும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நடவடிக்கை போல் இருப்பதாகவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
நீதிபதி சந்திரசூட் இதுகுறித்து தெரிவிக்கையில், “மருத்துவப் படிப்பு என்பது வியாபாரம் ஆகிவிட்டதை உணர முடிகிறது. மருத்துவ ஒழுங்கு முறைகூட வியாபாரமாக மாறிவிட்டது. இந்த நாட்டின் மருத்துவப் படிப்புகளின் சோக நிலை இது.” என்றார். தேசிய தேர்வு வாரியத்தின் புதிய தேர்வு முறையின் படி, 100% கேள்விகளும் பொது மருத்துவத்தின் கீழ் கேட்கப்படும். இதற்கு முன் 60% கேள்விகள் மாணவர்கள் தேர்வு செய்த மருத்துவ பிரிவுகளின் கீழும், மீதமுள்ள 40% கேள்விகள் பொது மருத்துவத்தின் கீழும் கேட்கப்பட்டு வந்தது.
12 சூப்பர் ஸ்பெசாலிட்டி பிரிவுகளுக்கு 100% பொது மருத்துவத்தின் கீழ் கேள்வித் தாள் தயாரிப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், பொது மருத்துவத்தின் மீது மத்திய அரசுக்கு ஏன் இந்த திடீர் அக்கறை என வினவியது. தனியார் கல்லூரிகளில் பொது மருத்துவத்தின் கீழ் ஏராளமான மருத்துவ இடங்கள் உள்ளதால் அதை நிரப்புவதற்காக 100% பொது மருத்துவம் தொடர்பான கேள்விகளை கொண்ட இந்த புதிய தேர்வு திட்டத்தை தேசிய தேர்வு வாரியம் கொண்டு வந்து உள்ளதோ உச்சநீதிமன்றம் சந்தேகம் தெரிவித்து உள்ளது.
தேசிய தேர்வு வாரியத்தின் இந்த புதிய தேர்வு முறை காரணமாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிகம் பயனடையும் என்றும், அரசுக் கல்லூரிகளில் மருத்துவ இடங்கள் காலியாக இருக்காது என்பதால் தேர்வு எழுதும் மாணவர்களை தனியார் கல்லூரிகளுக்கு அனுப்பும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டு இருப்பதாக நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நலனை விட மாணவர்கள் நலனே முக்கியம் என தெரிவித்த உச்சநீதிமன்றம் இன்று வழக்கை ஒத்தி வைத்தது.